இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் நாயகர்களாக நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்த ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, மேஸ்ட்ரோ இசைஞானி இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைப் பயிற்சி இயக்கத்தை மேற்கொள்கிறார். எழுதி, இயக்குகிறார் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றி மாறன்.
இந்த விடுதலை படத்தின் 2 பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
‘விடுதலை-1’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்று வரும் ‘விடுதலை-2’ படத்தின் படப்பிடிப்பை முடிக்க சில பகுதிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.
‘விடுதலை’ படம் தமிழ் சினிமாவில் தற்போது தயாரிக்கப்படும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்றாகவுள்ளது.
படத்தின் பிரம்மாண்டம் திரையுலகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது, குறிப்பாக 10-கோடி மதிப்பில் ரயில் மற்றும் ரயில்வே பாலத்தை தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள்.
ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அசலான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. முன்னதாக, சிறுமலையில் கலை இயக்குநரான ஜாக்கி தலைமையிலான கலைத்துறை பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைத்துக் கொடுத்திருந்தது.
இந்த விடுதலை படத்தின் தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இது ஒரு தீவிரமான கதையைக் கொண்டுள்ளது, இது பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் என்பதை உறுதிப்படுத்த சரியான கதை சொல்லல் தேவை.
எனவே, இதை இரண்டு பகுதிகளாக உருவாக்கும் யோசனை நடைமுறைக்கு வந்தது. மேலும் படக் குழு திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக உருவாகிறது.
தற்போது, கொடைக்கானலில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்ஷன் காட்சியை இயக்குவதால், பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்ஷன் பிளாக்கில் ஒரு பகுதியாக இடம் பிடித்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் ‘விடுதலை-1’ & ‘விடுதலை-2’ ஆகிய படங்களை வெளியிடும் நிலையில், முதல் பாகத்தின் வெளியீட்டு நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.