குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த, மக்கள் நடக்கும் தொங்கு பாலம், . ஞாயிற்றுக்கிழமை மாலை 6:40 மணியளவில் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் தண்ணீரில் விழுந்தனர்.
இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் சத் பூஜை சடங்குகளுக்காகவும், விழாக்களைப் பார்க்கவும் அங்கு கூடி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 150பேர் வரை மட்டுமே தாங்கக்கூடிய பாலத்தில், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பளு தாங்காமல் பாலத்தின் கம்பிகள் அறுந்து விழுந்ததாகத் தெரிகிறது.
இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது.
இதுவரை 142 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 177 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்த சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார்.
சுமார் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாலம், பழுது நீக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தான் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. குஜராத்தின் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பழுது மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு முறையான சோதனைகள் செய்யப்படவில்லை என்றும், பொதுமக்களுக்காக பாலத்தை மீண்டும் திறப்பதற்கு முன், அரசு அங்கீகாரம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சியை கீழே காணலாம்.