பிரபல பேய்ப்பட இயக்குநர்கள் சற்று ரெஸ்ட் எடுக்கத் துவங்கியிருக்கும் நேரத்தில் செல்வராகவன் இயக்கியிருக்கும் பேய்ப்படம்தான் இந்த ‘நானே வருவேன்’.
இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு ஆகியோரில் பிரபு நல்லவன் கதிர் கெட்டவன். பெற்ற அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய தாய்.
சென்னையில் ஒருவர் வட இந்தியாவில் ஒருவர் என வளரும் அவர்கள் இருவரும் திரைக்கதையின் அவசியம் கருதி, கால்நூற்றாண்டுக்குப் பின் சந்திக்க வேண்டிய கட்டாயம். அந்தக் கட்டாயம் என்ன? எதானால் அப்படி நடக்கிறது? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் நானே வருவேன்.
பிரபு, கதிர் ஆகிய இருவேடங்களிலும் தனுஷ் நடித்திருக்கிறார். அசுரத்தனமான நடிப்பு என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு பாத்திரங்களாகவும் மனுஷன் வாழ்ந்திருக்கிறார். தற்காலத்தில் நல்லதைவிட கெட்டதற்கே அதிகம் மதிப்பு என்பதற்கு எடுத்துக்காட்டாக கெட்டவனாக நடிக்கும் தனுஷின் தோற்றம், உடல்மொழி, நடிப்பு ஆகியன அமைந்திருக்கின்றன. ‘வீரா, சூரா’ என்கிற பாடலும் கெட்டவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்துஜா, எல்லி அவரம் ஆகிய இருவரும் முறையே பிரபு, கதிர் ஆகியோரின் மனைவிகளாக நடித்திருக்கிறார்கள். சிறப்பான நடிப்பு. தனுஷின் மகளாக வரும் ஹியாதவேவின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் படத்துக்குப் பலம்.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்து ஓகோவென வரவேற்பு பெறுகிறார் இயக்குநர் செல்வராகவன். தனுஷின் மகன்களாக வரும் பிரபவ், பிரணவ் ஆகியோர் நன்று
யோகிபாபு, பிரபு ஆகியோர் சும்மா பேருக்கு தலைகாட்டிவிட்டுப்போகிறார்கள்.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கதைக்கு பக்கபலமாக இருக்கிறது.
யுவன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அபாரம். புவன்சீனிவாசனின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது.
அப்பாவையே கொல்லும் மகன், மனைவியைக் கொல்லும் கணவன், மகனைக் கொல்லும் அப்பா என்று படம் முழுக்க திகில் கிளப்பியிருக்கிறார் செல்வராகவன். ஆனாலும், கடைசியில் நன்மையே வெல்லும் என்று முடித்திருப்பது ஆறுதல்.
செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி என்றாலே சம்திங் ஸ்பெஷல் இருக்கும் என்று மீண்டுமொருமுறை பேய்த்தனமாக நிரூபித்திருக்கிறார்கள்