தமிழ் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை நசுக்கி அவர்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தடைசட்டத்தைக் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி, தனது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்தியுள்ளார் ஆளுநர் ரவி.
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், மக்களிடையே குறிப்பாக மாணவர்களின் கையில், அலைபேசி பயன்பாடு அதிகரித்தது. தங்களுடைய ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகு, பல மாணவர்கள் ஒரு பொழுதுபோக்காக ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடத் துவங்கினர். முதலில் 100 ரூபாய், 200 ரூபாய் போன்ற சிறிய தொகையை வென்றவுடன் உற்சாகமடைந்த பலர் பெரிய தொகையை வெல்லலாம் என்று நினைத்து தங்களையும் அறியாமல் இந்த மரணப் பொறியில் சிக்கினர். இந்த சூதாட்டத்திற்கு அடிமையாகி, தொடர்ச்சியாகப் பணம் இழக்கத் தொடங்கினர்.
இதனால் மாணவர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது, நண்பர்களிடம் கடன் வாங்குவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தன. தாங்கள் விளையாடுவது ஒரு கணினியுடன் தான், மனிதருடன் அல்ல என்று உணராத பல பெண்களும் தங்கள் வாழ்நாள் சேமிப்பான நகை, பணத்தை இதில் இழக்கத் தொடங்கினர். இந்த சூழலைப் பயன்படுத்தி, சில கடன் நிறுவனங்கள் அதிக வட்டியில் கடன் வழங்கத் தொடங்கின.குறிப்பாக கடன் வழங்கும் செயலிகள் மூலம் வட மாநிலத்தவர் தமிழர்களை மிரட்டத் தொடங்கினர்.
இப்படிப்பட்ட கடன் தொல்லையாலும் மன உளைச்சலாலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆபத்தான போக்கை உணர்ந்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று மக்களும் பல்வேறு சமூக நல அமைப்புகளும் குரல் கொடுக்கத் தொடங்கினர். அதன் விளைவாக கடந்த சூன் 9, 2022 அன்று ஆன்லைன் விளையாட்டின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் தனது ஆய்வை மேற்கொண்ட அந்தக் குழு, அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய தனது அறிக்கையில் பரிந்துரைத்தது.
நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் மசோதா கடந்த அக்டோபர் 19 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. (இதற்கு முன்னதாக, அதிமுக அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய இதேபோன்ற அரசாணையை வெளியிட்டபோது, 2021இல் சென்னை உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது.) தமிழ்நாடு அரசு கொண்டு வரும் இந்த தடை சட்டத்தை All India Gaming Federation (AIGF) என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் எதிர்க்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதா, அவர் கையெழுத்திடாததால் நவம்பர் 27 அன்று காலாவதி ஆகி இருக்கிறது. மக்களின் உயிர்காக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம் ஏன் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டது? இதற்குப் பின் உள்ள அரசியல் என்ன? என்று கூர்ந்து கவனித்தால், இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு புலப்படும்.
உலகில் ‘சந்தைப்படுத்துதல்’ என்றாலே பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தியாதான் இலக்காக நினைவில் வரும். அந்த அளவிற்கு இங்குள்ள மக்கள் நுகர்வோராக மாற்றப்பட்டுள்ளனர். அதன்படியே ஆன்லைன் சூதாட்ட சந்தைகளில் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா இன்று உருவெடுத்துள்ளது. 2022இல் கிட்டத்தட்ட 18000 கோடி ரூபாய் இருக்கும் இந்திய சூதாட்ட சந்தை மதிப்பு, 2025இல் 40800 கோடி ரூபாயை எட்ட உள்ளது.
இவ்வாறு பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் தலைமை நிறுவனம் AIGF. கடந்த 2016இல் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட All India Gaming Federation (AIGF) நிறுவனத்தில் தற்போது நூற்றுக்கும் அதிகமான முகவர்கள் உள்ளனர். இந்த முகவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் சுழற்சிக்கு விடப்படுகிறது. இந்தப் பணம், சூதாட்ட செயலிகளில் முதலீடு செய்யப்பட்டு , மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கவர்ந்து, அவர்களை இந்த விளையாட்டிற்கு அடிமையாக்குகின்றது. மேலும் கோடிக்கணக்கில் செலவு செய்து நடிகர்கள் மூலமும், கிரிக்கட் வீரர்கள் மூலமும் விளம்பரம் எடுக்கப்படுகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் சூதாட்டத்தில் சிக்க வைக்கப்படுகின்றனர்.
இப்படி பணம் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் ஆளுநரும் பாசகவினரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தனியார் அமைப்பான AIGF (தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டிற்குத் தடை வாங்கிய பீட்டா அமைப்பு போல்) இன்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆளுநர் மூலம் காய் நகர்த்தி வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது எழும்பியிருக்கிறது.
ஆளுநர் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் மக்கள் விரோதமாக இருந்து வருவதைப் போல, இந்த ஆன்லைன் ரம்மி தடை குறித்தான சட்ட மசோதாவிற்கும் சட்ட அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து மசோதாவை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தி காலாவதி ஆக்கிவிட்டார். ஆளுநரின் காலதாமதம் ஏன் என்ற கேள்வி தமிழர்களிடையே கொதிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் சட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட போது சந்திக்க நேரம் ஒதுக்காத ஆளுநர். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத் தலைமைகளை சந்தித்து பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த முரணான செயல்பாடுகள் பெருத்த சந்தேகத்தை கிளப்புகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 12 கோடி பேர் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். ( இதில் பாதிக்கும் மேல் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இப்படி மக்களை அடியாமையாக்கி உயிர் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை, மக்கள் நலன் விரும்பும் அனைவருமே தடுக்கத்தான் விரும்புவர். ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் உள்ள வணிகத்தை, மக்களின் உயிரை விடப் பெரியதாக ஆளுநர் கருதுகிறார். இந்த மக்கள் விரோத போக்கிற்குத் துணையாக மகாபாரதக் கதையில் வரும் சூதாட்டத்தை பாசகவினர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். தற்போது AIGF உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்திருப்பது நம் சந்தேகத்தை உறுதிப்படுத்தவே செய்கிறது.
செல்லுமிடமெல்லாம் சனாதனத்தை ஊக்குவித்துப் பேசி வரும் ஆளுநர் ரவியும், சூதாட்டத்தை சட்டவிரோதமாக விளையாடும் வழிமுறைகளைப் பரப்பும் பாசக தலைவர் அண்ணாமலையும் தமிழ் நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளவே முனைப்பாய் செயல்படுகிறார்கள் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் களைந்து, மக்கள் விரோத பாசக வையும், அதற்குக் கைப்பாவையாக செயல்படுகின்ற ஆளுநரையும் கண்டிக்க வேண்டும்.
நன்றி: மே 17 இயக்கக் குரல்.
https://may17kural.com/wp/governor-ravi-promotes-online-gambling/