இந்துக்கள் ஆயுதங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் கத்தியையாவது தயாராக வைத்திருங்கள் என பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகாவில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்து வரும் பிரக்யா சிங் தாக்கூரின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
2006-ம் ஆண்டு மாலேகான் நகரில் ஒரு மசூதியில் வெடிகுண்டு வைத்து வெடித்ததில் 6 பேர் இறந்த, 100 பேர் காயமுற்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்தவர். பின்பு விடுதலையாகி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வென்றவர். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய இந்துத்துவா வெறிக் கருத்துகளை கூறிவருபவர் பிரக்யா சிங் தாக்கூர்.
கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை ஒட்டி கர்நாடகாவில் பிரச்சாரம் செய்துவரும் பிரக்யா சிங் இந்துத்துவா அமைப்பான ஜாக்ரன் வேதிகாவின் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அப்போது, உலகை கடவுள் படைத்தார் என்பது சன்னியாசிகளின் கருத்து. லவ் ஜிஹாதிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். நம் பெண் குழந்தைகளுக்கு கலாசார மதிப்பு, விழுமியங்கள் குறித்து பாடம் நடத்துங்கள் என்றார்.
மேலும் கர்நாடகாவில் இந்துத்துவவாதிகள் கொல்லப்படுவது குறித்து பேசிய பிரக்யா சிங் தாக்கூர் நீங்கள் ஆயுதங்களை கூர்மையாக தயார்படுத்தி வைத்து கொள்ளுங்கள். உங்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அத்துடன் உங்கள் வீடுகளில் ஆயுதங்களை தயாராக வைத்து கொள்ளவும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். குறைந்தபட்சம் கத்தியையாவது வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த நாட்டில் எல்லோரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு என்றார்.
அதேபோல், வீடுகளில் பூஜைகளை நடத்துங்கள். தர்மம், சாஸ்திரங்கள் குறித்து படியுங்கள். இவற்றை குழந்தைகளுக்கும் கற்பிக்கவும். அப்போதுதான் நமது கலாசாரம், பண்பாட்டை நமது குழந்தைகள் கற்றுக் கொள்ளும் எனவும் பிரக்யாசிங் தாக்கூர் கூறினார். ஒரு புறம் இந்து மதம், கலாச்சாரம் என்று பேசுவதும், மறுபுறம் மதவெறி கலவரம் ஏற்படுத்தி பிற மதத்தவரை கொல்லும்படி பேசுவதுமான இரட்டை வேடமே இந்துத்துவா சங்கிகளின் பொதுவான பிரச்சார உத்தியாகும்.
ஏற்கனவே, கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு அதன் உட்கட்சி பூசல்களே பெரும் தலைவலியாக உள்ளது. அத்துடன் லிங்காயத்துகள் போராட்டம், எல்லை பிரச்சனை ஆகியவையும் பாஜகவுக்கு பிரச்சனைகளை தந்துள்ளன. பாஜகவுக்கு எதிராக ஜனார்த்தன ரெட்டி புதுக் கட்சியையே தொடங்கிவிட்டார். தற்போது பிரக்யா சிங் தாக்கூரின் சர்ச்சை பேச்சு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றிய கதையாக்கி விட்டது பாஜகவுக்கு.