இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறியுள்ளார்.
18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்ட றிய முடியவில்லை என்றும் செயற்கைக்கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது கண்டறியப்பட்ட போதும் அதை ராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம் என்றும் தெரி வித்துள்ளார்.
அமைச்சர் தன்னுடைய பதிலில் 18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு என்று கூறியிருப்பது ஏனென்றால் இந்தப் பாலம் பொய்யென்றால் ராமாயணப் புராணக் கதையும் பொய்யென்பது தெளிவாகிவிடும். ஏற்கனவே ராமர் ஜென்ம பூமி என்று பாபர் மசூதியை இடித்து தற்போது கட்டிக் கொண்டிருக்கிற கோவில் எல்லாம் பொய்யென்பது அம்பலமாகும்.
அத்தோடு ராமர் கட்டிய பாலம் இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்ததாகக்கூறி சேது சமுத்திர திட்டத்தை முன்பு பாஜக தடுத்தது குறித்து கேள்வி எழும் என்பதால் அமைச்சர் சாதுரியமாக 56 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் இருந்ததாக நாம் நம்புகிறோம் என்கிறார். இப்படித்தான் ராமர், அனுமான் என்று எல்லோரையும் நம்புகிறார்கள் பாஜகவும் ஆர்எஸ்எஸூம்.
நம்பிக்கை என்பது வேறு, அறிவியல் உண்மை என்பது வேறு. அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் ராமர் கட்டிய பாலம் என்று கூறப்படும் மனிதர்களால் கட்டப்பட்ட எந்தக் கட்டுமானமும் இல்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார்கள்.
ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் அமெரிக்காவின் நாசா விண்வெளிக் கோள் படம் பிடித்து அனுப்பிவிட்டது என்றெல்லாம் கூறி பிரச்சாரம் செய்து , அப்போது துவக்கப்பட்ட சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை முடக்கி விட்டார்கள்.
இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய ஆட்சிப்பொறுப்பில் ஐக்கிய முன்னணி அரசு இருந்தபோது 2005ல், மன்மோகன் சிங்கால் மதுரையில் சேது சமுத்திரத்திட்ட துவக்க விழா நடைபெற்று பணிகளும் துவங்கின. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து செய்த ரகளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிர மணியசுவாமி தொடர்ந்த வழக்கு ஆகியவற்றால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
உச்சா நீதிமன்ற நீதிபதிகள் கூட அறிவியல் உண்மைகளை கணக்கில் கொள்ளாமல், ஆராயச் சொல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் மாற்று வழியை யோசிக்குமாறு கூறி இதை கிடப்பில் போட உதவினார்கள். பின்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாஜக இந்தத் திட்டத்தை ஊற்றி மூடிவிட்டது.
நம்பிக்கை என்ற பெயரில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கையும் கூட உச்சாநீதிமன்ற நீதிபதிகள் அணுகினர். இப்போது ராமர் பாலம் இல்லை என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டம் மீண்டும் துவக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
அறிவியல் பூர்வமாக விஷயங்களை அனுகாமல் மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லாது.