“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
கேட்டவர் இளையராஜா-
கேட்டது பாலு மகேந்திராவிடம்..!

அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
 
பாலு மகேந்திரா புரிந்து கொண்டார்.
இளையராஜா – பாலு மகேந்திரா.
இருவரும் இணைந்த முதல் படம் மூடுபனி.
ஆனால் அது இளையராஜாவுக்கு 100 வது படம்.
அந்தப் படத்திற்கான பின்னணி இசை ஆலோசனையின்போது, இன்னின்ன இடங்களில் இசை, இப்படி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சின்ன சின்ன ஆலோசனைகளை இளையராஜாவிடம் பகிர்ந்திருக்கிறார் பாலு மகேந்திரா.
அது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.
வளர்ந்து வரும் தனது படைப்பாற்றலை பாலுமகேந்திரா கட்டுப்படுத்துகிறாரோ என ஐயம் மூடுபனியாக எழுகிறது இளையராஜாவுக்கு !
அதனால்தான் இளையராஜா, பாலுமகேந்திராவிடம் கேட்டிருக்கிறார் இப்படி :
 
“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
 
பாலுமகேந்திரா நிதானமாக ஆரம்பித்திருக்கிறார் :
“Raja, Let me answer your question this way..!”
 
“சொல்லுங்கள்.”
 
தொடர்கிறார் பாலுமகேந்திரா:
“ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து, அதாவது ‘நதிமூலம்’ என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
 
ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது.
 
இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள, அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.
 
இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது.
 
அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.
 
இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.
 
இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.
இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது? இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள நிலப்படுகைதானே, நிலத்தின் அமைப்புதானே தீர்மானிக்கிறது !”
பாலுமகேந்திரா சொல்ல சொல்ல, சுகமான சங்கீதம் கேட்கும் நிலையில் சொக்கிப் போய் அமைதியாக அமர்ந்திருக்கிறார் இளையராஜா.
 
இன்னும் சொல்கிறார் பாலுமகேந்திரா : “இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும்.
ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம்தான், அந்தப் படத்தின் திரைக்கதைதான் script-தான் தீர்மானிக்கிறது.
இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு…
மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதைதான். அதன் script-தான்.”
பாலுமகேந்திரா சொல்லி முடிக்க இளையராஜாவின் மூடி இருந்த கண்களில் மூடு பனியாய் ஈரம் துளிர்க்க, நல்லதொரு சங்கீதம் கேட்ட ரசிகன் போல தன்னையறியாமல் எழுந்து நின்று கை தட்டுகிறார் இளையராஜா.
 
எனக்கு ஞாபகம் இருக்கிறது.
“மூடுபனி” வெளிவந்த அந்த வேளைகளில், படத்தின் டைட்டிலில் “இளையராஜா” என்ற பெயர் வரும்போது, எத்தனையோ ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள்.
இப்போதுதான் தெரிகிறது,
அந்தக் கை தட்டலில் பாலுமகேந்திராவுக்கும் பாராட்டும் அளவுக்கு பங்கு இருக்கிறது என்று..!
ஆனால் முழுவதும் வெளியில் தெரியாத “மூடுபனி”யாக…!
 
முகநூலில்..
John Durai Asir Chelliah
(மீள்)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.