பொள்ளாச்சியில் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர்சுற்றியபடி, மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை.
பாலக்காட்டில் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யாலட்சுமிக்கும் அவர் மல்யுத்த வீராங்கனை என்பதாலே மாப்பிள்ளை கிடைக்கவில்லை.
இவர்கள் இரண்டு பேரும் இரண்டு பொய்களைச் சொல்லி திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள். அதன்பின் நடப்பவற்றை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் கட்டாகுஸ்தி.
சொந்தவீடு இருபது ஏக்கர் தோப்புக்குச் சொந்தக்காரர் என்பதற்குப் பொருத்தமாக விஷ்ணுவிஷால் மைனர் கெட்டப்பில் நன்றாக இருக்கிறார். அலட்சியமாக ஒவ்வொரு விசயத்தையும் அவர் அணுகுவது இயல்பு. மனைவியை வசியம் செய்ய அவர் செய்யும் முயற்சிகள், உண்மை தெரிந்ததும் அப்படியே தலைகீழாக மாறுவது ஆகியன இரசித்துச் சிரிக்க வைக்கும் இரசனைமிகு காட்சிகள். இறுதியில் அவர் பேசும் வசனங்கள் சிந்திக்க வைப்பன.
நாயகி ஐஸ்வர்யாலட்சுமி இந்தப்படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இடைவேளை நேரத்தில் வரும் சண்டைக்காட்சி அசத்தல். என்னதான் குஸ்தி வீராங்கனை என்றாலும் கல்யாணம் என்றதும் வெட்கப்படுகிறார், கணவனாக வரப்போகிறவரின் குணம் அறிந்து பெருமிதப்படுகிறார். அவரை எனக்குப் பிடிச்சிருக்கு என்று சொல்லும் காட்சியில் ஆனந்தமாகக் கலங்க வைக்கிறார். இப்படிப் படம் நெடுக காட்சிக்குக் காட்சி முன்னேறி வியக்க வைத்திருக்கிறார்.
நாயகனின் மாமாவாக வரும் கருணாஸின் வேடமும் அதற்கு மிகப்பொருத்தமாக அவர் நடித்திருப்பதும் படத்துக்குப் பெரும்பலம்.வீட்டில் அடிவாங்கும் கணவர்களுக்குக் கருணாஸ் ஆறுதல் தருகிறார்.அவருக்கு வாய்த்தது போல் மனைவி அமைந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
வழக்கறிஞராக வரும் காளிவெங்கட், நாயகியின் சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த், கோயில் தர்மகர்த்தாவாக வரும் ரெடின்கிங்ஸ்லி,ஹரீஷ்பெரோடி ஆகியோர் படம் கலகலப்பாகக் கடந்து செல்ல உதவியிருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்குக் குளுமை. கேரளாவில் நடக்கும் திருமணக்காட்சிகள் அழகு.
ஜஸ்டின்பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையில் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன.
அன்பறிவ்வின் சண்டைப்பயிற்சிக்கும் முக்கியத்துவம் உள்ள கதை.அதைப்புரிந்து அட்டகாசமான சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பு படத்தைச் சிரித்து இரசிக்க வைக்கிறது. கருணாஸ் மனைவிகளைப் பற்றிப் பேசும் அதேநேரம் பெண்கள் கணவன்மார்களைப் பற்றிப் பேசும் காட்சிகளைச் சரியாகத் தொகுத்திருப்பது நன்று.
எழுதி இயக்கியிருக்கும் செல்லா அய்யாவு, வாய்விட்டுச் சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கும் காட்சிகளையும் அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
கட்டாகுஸ்தி , கலகலப்பான குஸ்தி !!