*#நாதுராம்கோட்சே*
_*தமிழில் இ.பா.சிந்தன்

_எதிர் வெளியீடு, வரவிருக்கிறது_

*அறவழிப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாகிரகம், உண்ணாவிரதப்போராட்டம் எனப் பல்வேறு விதமான போராட்டங்களின் வழியாக ஆங்கிலேயர்களை அதிரவைத்து, இந்தியாவின் விடுதலைக்காக பெரும்பங்காற்றியவர் மகாத்மா காந்தி. அவரைப்பற்றி நாம் பள்ளிப்பாடம் முதல் பொதுச்சமூகக் கதையாடல் வரையிலும் பலவழிகளில் அறிந்திருக்கிறோம்.*

*ஆனால் காந்தியின் இறப்பு குறித்துமட்டும், நமக்கு காலங்காலமாக சொல்லப்பட்ட ஒரே வரி என்ன தெரியுமா?*

*”நாதுராம் கோட்சே என்பவனால் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்”*

*என்பதுதான் அது.*

*இந்த வரியைத் தாண்டி வேறெதுவுமே நமக்கு சொல்லித்தரப்படவில்லை.*

*யார் இந்த நாதுராம் கோட்சே?*

*எதற்காக காந்தியைக் கொன்றான்?*

*கொல்வதற்கு அந்த தேதியை ஏன் தேர்ந்தெடுத்தான்?*

*அவனுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?*

*அவனுக்கு யாரெல்லாம் உதவியாக இருந்தார்கள்?*

*கோட்சேவுக்கும், அவனுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும் பின்னால் என்ன கொள்கை இருந்தது?*

*விசாரணையின்போது அவன் என்னவெல்லாம் கூறினான்?*

*அவனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டபோது தவறை உணர்ந்தானா?*

*காந்தியைக் கொன்ற அந்த கொள்கையும் தத்துவமும் கோட்சேவைத் தூக்கில்போட்டதும் அழிந்துவிட்டதா?*

*இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நமக்கு விடை தெரிந்திருக்க வேண்டும்தானே. ஆனால் அந்த விடைகளைத் தெரிந்துகொள்ள விடாமல் இத்தனை ஆண்டுகளாக யார் தடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்?*

*ஆர்எஸ்எஸ் இல் கோட்சே உறுப்பினராக கடைசி வரையிலும் இருந்ததாக சொல்கிறார்களே, அது உண்மையா?*

*ஆர்எஸ்எஸ்ஐ விட்டு கோட்சே விலகிவிட்டதாக ஆர்எஸ்எஸ்காரர்கள் சொல்கிறார்களே, அது உண்மையா?*

*கோட்சேவை வளர்த்து, காந்தி கொலைக்கான திட்டமிடலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்ததே சாவர்க்கர்தான் என்கிறார்களே. அது உண்மையா?*

*அப்படியென்றால், அந்த சாவர்க்கர் மட்டும் காந்தி கொலை வழக்கில் விடுதலை ஆனது எப்படி?*

*காந்தியைக் கொல்லும் திட்டமே ஆர்எஸ்எஸ்-ம் இந்துமகாசபையும் இணைந்து சாவர்க்கரின் தலைமையில்தான் தீட்டப்பட்டது என்கிறார்களே, அது உண்மையா?*

*சாவர்க்கர் குறித்து பல குழப்பங்கள் நிலவுதே. அவர் ஒரு தேசபக்தரா அல்லது தேசவிரோதியா?*

*காந்தி கொல்லப்பட்டபோது மக்களின் மனநிலை என்னவாக இருந்தது?*

*என்று கேள்விமேல் கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறதல்லவா.*

*இந்த நூலின் ஆங்கில மூலத்தைப் படித்தபோது, மேலே பட்டியலிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் எனக்கு விடைகிடைத்தது. அதனால்தான் இந்த நூலைத் தேர்ந்தெடுத்து பல மாதங்களை ஒதுக்கி, மொழிபெயர்த்து உங்கள்முன் கொண்டுவந்திருக்கிறோம்.*

*அதான் காந்தி கொல்லப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டதே. இப்போது எதற்கு பழைய விசயங்களைக் கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

ஆனால் காந்தி எதற்காக கொல்லப்பட்டாரோ அதே காரணத்தை தங்களுடைய மனதில் ஏந்திக்கொண்டு, காந்தியைக் கொன்றவர்களுடைய தத்துவங்களைப் பின்பற்றும் ஏராளமானோர் இன்றைக்கும் நம்மைச் சுற்றியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல், நம்மை ஆளும் அதிகாரமே அவர்கள் கையில்தான் போய்ச்சேர்ந்திருக்கிறது.*

*கொடூரக்கொலைகாரர்களின் பின்னிருக்கும் தத்துவங்கள் என்றைக்கும் வென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இன்றைக்கும் ஐரோப்பாவின் பள்ளிப்பாடத்திட்டம் முதல் பத்திரிக்கைகள் வரையிலும் ‘ஹிட்லரும் அவனுடைய பாசிச நாஜித் தத்துவமும் மனிதகுலத்துக்கே விரோதமானது’ என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

‘யூதர்களை இனவெறியுடன் ஹிட்லர் கொல்லவில்லை’ என்று பொதுவில் சொல்வதே சட்டவிரோதம் என்பதாக சட்டமெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஹிட்லரும் அவனுடைய தத்துவமும் இனியெப்போதும் நம்முடைய சமூகத்தில் திரும்பிவந்துவிடக்கூடாது என்பதுதான் அதன் மைய நோக்கம்.*

*ஆனால் காந்தியைக் கொன்ற கோட்சே குறித்தோ, அவனுக்குப் பின்னிருந்த தத்துவத்தையோ நாம் வெளிச்சம் போட்டுக்காட்டவோ, மக்களிடம் பெரியளவில் பிரச்சாரம் செய்யவோ இல்லை.*

*அதனைச் செய்யாமல் போனதால் என்ன பெரிதாகக் கெட்டுவிட்டது என்று கேட்கிறீர்களா? ஆம், கெட்டுத்தான் போய்விட்டது.

மதநல்லிக்கணக்கத்தையும் சமூகஒற்றுமையையும் வலியுறுத்திப் போராடிவந்த காந்தியைக் கொன்ற அதே கொள்கைதான் இன்றைக்கும் எம்.எம்.கல்புர்கியையும் நரேந்திர தபோல்கரையும் கோவிந்த் பன்சாரேவையும் கௌரி லங்கேசையும் சுட்டுக்கொன்றிருக்கிறது. காந்தியைக் கொன்றவனுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பொதுவெளியில் எப்படியாக இந்துத்துவவாதிகள் சொன்னார்களோ, அதேபோலத்தான் சமீபத்தில் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் வரையிலும் சொல்லிவருகிறார்கள்.*

*ஆக, காந்தியைக் கொன்றவர்களின் உண்மையான முகத்தைக் கிழித்தெறிவதில் இருந்தே இதனைத் துவங்குவதுதான் சரியாக இருக்கும். காந்தியைக் கொன்றவர்களின் வாழ்க்கையைத் தோண்டியெடுத்து, படித்து, பகிர்ந்து, விவாதித்து, மக்கள்முன் வைப்பதன்மூலம்தான் காந்தியைக் கொன்ற கொள்கையையும் அதன்பின்னிருக்கும் அமைப்புகளையும் தோலுறித்துக்காட்டி அம்பலப்படுத்தி தோற்கடிக்க முடியும்.*

அதனை இந்த நூல் செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.

காந்தி கொலை தொடர்பான வாதங்களிலும் விவாதங்களிலும் எடுத்துவைப்பதற்கு ஏற்ற ஏராளமான ஆதாரங்கள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன.

_பின்குறிப்பு:

கொலைகாரர்களைப் பற்றிய நூல்தான் இதுவென்றாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி, அதற்குள் இரண்டு பெண்களின் அழகான காதலும், காந்தி கொல்லப்பட்டதால் அந்த காதலின் நிலை என்னவாக மாறியது என்பதும் நூலின் ஓட்டத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இந்நூலில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம் இருக்கிறதென்றால், அவ்விரு காதல் கதைகளை உறுதியாகச் சொல்வேன்.*

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.