ஒரு வங்கிக்கொள்ளை நடக்கிறது. அதில் அஜித்குமாரும் சம்பந்தப்படுகிறார். இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் துப்பாக்கிக் குண்டு மழைக்கு மத்தியில் சொல்லியிருக்கும் படம்தான் துணிவு.
ஒரு தனியார் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு ஒரு கூட்டம் அந்த வங்கி உள்ளே நுழைகிறது. துப்பாக்கிகளைச் சுட்டுக் கொண்டே உள்ளே போய் மக்களை மிரட்டிப் பணிய வைக்கிற நேரத்தில் அங்கே உள்ள ஒருவர், கொள்ளையர்களை மடக்குகிறார். அவர்தான் அஜீத்.
கொள்ளையர்களை அவர் மடக்கிப் பிடித்துத் துப்பாக்கி முனையில் வைக்கிற நேரத்தில் எலோரும் கைதட்டி அவரைப் பாராட்டுகிறார்கள். அப்போது, நானும் இந்த வங்கியைக் கொள்ளையடிக்கத்தான் வந்தேன் என்று அதிர்ச்சி தருகிறார்.
இந்தப் படத்திலும் சால்ட் அன்ட் பெப்பர் நரைத்த தாடி மீசையுடன் அறிமுகமாகும் அஜீத் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை இரசித்து ருசித்து நடித்திருக்கிறார். செய்யும் செயல்குறித்த தெளிவுடன் இருக்கும் அஜீத் துணிவுடன் அரசாங்கங்களையே எதிர்கொள்கிறார்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவோடு இருக்கும் தனியார் வங்கித்தலைவர், பரஸ்பர நிதி முதலீட்டு முதலை, போலிநிறுவன அதிபர் ஆகிய பெருமுதலைகளைச் சிறைபிடிக்கிறார். ஆடல், பாடல், அலட்சியப்பேச்சு என்று அஜீத் இருந்தாலும் அவர் பேசும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆழமானவை. அவருக்கு ஜோடியாக வரும் மஞ்சுவாரியரும் துப்பாக்கிகளைக் கையாளுகிறார். சுட்டுத்தள்ளுகிறார்.
வங்கிக்கொள்ளைக்கு வரும் வீரா உள்ளிட்டோரும், வங்கியில் இருக்கும் ஜி.எம்.சுந்தர், பிரேம், வங்கித்தலைவர் ஜான்கொக்கேன், காவல்துறை ஆணையர் சமுத்திரக்கனி, ஆய்வாளர் பக்ஸ், காவலர் மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் கதைக்குள் கச்சிதமாய்ப் பொருந்த நிற்கின்றனர்.
ஒரே கட்டிடத்துக்குள் பெரும்பாலான காட்சிகள் இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படாமல் பல்வேறு கோணங்களில் கதையை நகர்த்த உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. ஆனாலும் கதை ஆங்காங்கே டல்லடிக்கிறது.
ஜிப்ரானின் இசையில் அஜீத்துக்குப் பிடித்த தன்னம்பிக்கைப் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பின்னணி இசையில் விதவிதமான துப்பாக்கிக் குண்டுகளின் ஒலிக்காக அவர் மெனக்கெட்டிருக்கவேண்டும். படம் விட்டு வெளியே வந்தும் காதுக்குள் துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. அஜீத் நின்றபடியே எவ்வளவு ஆடமுடியும் என்பதைக் கணித்து அந்த அசைவுகளை மட்டுமே அவருக்கு கொடுத்து அஜீத்தை காப்பாற்றியிருக்கிறார் நடன இயக்குனர்.
அ.வினோத் இயக்கத்தில், படம் நெடுக நம்பவியலாத காட்சிகள் நிறைந்திருப்பினும், எல்லோரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் வங்கி மூலமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள்,கையில் பணமிருந்தால் அதை வீட்டில் வைக்காதீர்கள் வங்கியில் போட்டு வையுங்கள் அல்லது நிதித்திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யுங்கள் என்று கூவிக்கூவி பரப்புரை செய்து வரும் ஒன்றிய அரசின் திட்டங்களால் அப்பாவி மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கமாகச் சொல்லியிருப்பது நிறைவு.
ஒன்றிய அமைச்சரின் உத்தரவின் பேரில் உள்ளே நுழையும் அதிரடிப்படையிடம் “ரவிந்தர் இது தமிழ்நாடு, உன் வேலை இங்கே செல்லாது” என சமுத்திரக்கனி சொல்லுமிடம் தற்போதைய அரசியல் சூட்டில் எண்ணெய் ஊற்றுமிடம்.
மினிமம் பேலன்ஸ் ஐயாயிரம் இருந்தது, எஸ் எம் எஸ் அலர்ட்டுக்காக நாற்பது பிடித்தோம்.அதனால் மினிமம் பேலன்ஸ் குறைந்தது அதனால் மாதம் ஐநூறு ஃபைன் என்று வங்கி மேலாளராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் சொல்லும்போது வங்கிகள் ஏழை மக்களை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பது அம்பலமாகிறது.
நிதியமைப்புகளான வங்கிகள் எல்லாம் ரொம்ப நேர்மையாக இல்லை. அவை சாமானியனின் வாழ்க்கைக்கு உதவும் இடத்திலும் இல்லை மக்களுக்கு உணர்த்திய வகையில் துணிவு படத்தை நிச்சயம் பாராட்டலாம்.
அஜித் நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும் கார்ப்பரேட் அரசியலை கதை மூலம் பேசியிருப்பது நன்று.