நேற்று செத்துப்போன அந்த பையன் இந்த மாநகரத்துக்குள் யார், அவன் அடையாளம் என்ன?
என்று தேடினால் அடையாளங்கள் ஏதுமற்ற உதிரிபாட்டாளியாக இருந்திருக்கிறான், அவன் அம்மா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார், அப்பா கிடையாது, 40 வயதுக்குள்ள்ளாக இருக்கும் அந்த அம்மா கணவனை இழந்திருக்கிறார், கணவர் என்ன சூழலில் இருந்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும்,
19 வயதில் இருக்கும் அந்தப் பையன் பார்ட் டைம் வேலையில் இருந்திருக்கிறான் பைக் தான் அவனோட முதலீடாக இருந்திருக்கிறது அதற்கான டியூவை கூட அவர் அம்மா சம்பாதித்து கட்டி சமாளித்து வருவதாக சொல்கிறார், அவர்கள் வீடு 200 சதுர அடிக்குள்ளாக இருக்க வேண்டும்,
இந்த மாநகருக்குள் அவனுக்கு என்ன விதமான வாழ்வு கைகூடி இருக்கிறது ஒரு மேம்பட்ட வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான எந்த வாய்ப்பும் அற்றவனாகவே வளர்ந்து வந்திருக்கிறான், இந்த மாநகருக்குள் எத்தனை நல்ல மைதானங்கள் இருக்கின்றன? எத்தனை பள்ளிகளில் மனப்பாடம் செய்வதை தாண்டி விளையாட்டுக்கோ மற்ற திறமைகளுக்கோ ஒரு மாணவன் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளவையாக இருக்கின்றது?
ஒரு மேம்பட்ட வாழ்வை நோக்கி நகர்வதற்கான எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட ஒருவன் பொருளாதார அதிகார ருசியை அறியாத ஒருவன் திரையில் காணும் சூப்பர் ஹீரோவோடு தன்னை இணைத்துக் கொள்கிறான், தன் எல்லா மன அழுத்தங்களையும் அந்த சூப்பர் ஹீரோ செய்யும் சாகசங்களோடு தீர்த்துக் கொள்கிறான், பட ஓப்பனிங் அவனுக்கு திருவிழா, அந்தப் பெருங்கூட்ட உளவியலில் தன்னை யார் என்று காட்டிக் கொள்ள ஏதேதோ செய்கிறான். செத்து போய்ட்டான்,
அவனுக்கு எந்த அடையாளமும் இல்லை தன் சூப்பர் ஹீரோவின் ரசிகன் என்பதை தாண்டி அவன் படத்தின் வெற்றி படத்தின் வியாபாரம் அடுத்த படம் இதற்குள்ளாகவே வாழ்கிறான், ஓரளவுக்கு பொருளாதார பலம் உள்ள மிடில் கிளாஸ் பையன் இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு உடனடியாக தன்னை விடுவித்துக் கொள்ளத் தெரிந்தவனாக இருக்கிறான்,
ஆனால் 19 வயதில் பார்ட் டைம் வேலைக்கு போய் குடும்பத்தை ஈடு கட்டும் உதிரி பாட்டாளிகளின் மனநிலை எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்டவர்கள் மனநிலை இப்படி சூப்பர் ஹீரோக்களோடு பிணைக்கப்பட்டு ஆற்றுப்படுத்தப்படுகிறது, இது அப்படியே அந்த ஹீரோவின் பக்கம் அவருக்கு இவன் ஒரு சந்தை அவ்வளவுதான், பிஸினஸ் அதை தாண்டி எந்த சமூக அக்கறையும் அவர்களுக்கு கிடையாது, ஆனால் இது ஒரு சமூகப் பிரச்சனை..
ஒரு சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என்று கற்றுத் தரும் அரசுகள் இங்கே இல்லை, பள்ளிக்கூடம் கல்லூரிக்குள் நுழையும் மாணவனுக்கு விளையாட்டு கலை இலக்கியம் என்று அவன் எல்லா எண்ணங்களுக்கும் வாய்ப்பளிக்கும் கட்டமைப்புகள் இங்கே இல்லை, அதைப் பற்றி பேசும் சிந்திக்கும் அட்வான்ஸ் செக்சனும் கூட இங்கே இல்லை.
அகிரா குரசோவாவை கூப்பிட்டு ஒரு படத்தை எடுத்து தரச் சொல்லி தன் மக்களுக்கு கொடுக்கிறது ரஷ்யா, அப்படி எத்தனை முயற்சிகளை நம் அரசுகள் செய்திருக்கின்றன?. புயலிலே ஒரு தோணி போல தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த நாவல்களை படமாக எடுத்து தரச் சொல்லி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு சேர்த்து வழங்க இந்த அரசுக்கு எவ்வளவு செலவாகும்?
மக்கள் நல அரசு என்பது வெறும் பொருளாதாரக் குறியீடுகளை மட்டும் கவனிப்பது அல்ல சமூக வளர்ச்சியில் அதன் அத்தனை பரிமாணங்களுக்கும் உரிய வாய்ப்புகளையும் வழங்கி ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பற்றி சிந்திப்பது தான்..
–நன்றி. Anbe Selvaவுக்கு.