குழந்தைத் திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு குறி:
திஸ்பூர், பிப். 15 – அசாம் மாநிலத்தில் கடந்த ஒருவார காலமாக குழந்தைத் திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லீம் மக்களைக் குறி வைத்து பாஜக அரசு வேட்டை யாடி வருகிறது. இளைஞர்கள், முதியவர்கள் என பாகுபாடின்றி, புகார் கடிதம் எதுவும் இல்லாமல் கைது நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த திருமணங்களை தேடிப் பிடிக்காமல் 4-5 வருடங்கள் முன்பு 16,17 வயதுகளில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தால் கூட அவர்களையும் தேடிப் பிடித்து கைது செய்கிறது காவல் துறை. இதனால் யார் வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
நிரம்பும் சிறைகள்
ஒரே வாரத்தில் 3000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள சிறைகள் மிக குறைந்த இடவசதி கொண்டவை. ஒரே நேரத்தில் எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் அதிகளவு நபர்களை சிறையில் அடைக்க நேரிடுவதால் சிறை நிர்வாகத்தில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
தற்காலிக சிறைகளைத் திறக்க மாநில அரசு திட்ட மிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அச்ச உணர்வு
அசாம் பாஜக அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் மாநில மக்களிடையே அச்ச உணர்வு மேலும் அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் பலர் எழுத்தறிவற்றவர்கள்.
என்ன நடக்கிறது? ஏன் இந்த கைது நடவடிக்கை? எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? எந்தச் சிறையில் உள்ளார்கள்? எப்பொழுது சிறையில் இருந்து வெளியே விடுவார்கள்? என்பதை புரிந்து கொள்ள இயலாமல், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிகுந்த மன அழுத்தத்துடன் ஒவ்வொரு நாளின் பொழுதையும் உயிர் போகும் வேதனையில் கடத்தி வருகின்றனர். கணவர் மற்றும் குடும்பத்தினர் சிறையில் இருப்பதால் பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் அன்றாட உணவிற்காக கூட கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பலி எண்ணிக்கை 4.
1.அடக்குமுறையின் விளைவாக துப்ரி மாவட்டத்தில் உள்ள ராம்ராய்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்னா பீபி என்ற பெண் தனது மருமகன்களை கைது செய்வதை தடுக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிவடைய பிப்ரவரி 10-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
2.கரீம்கஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா நகர் கிராமத்தில் ஸ்வீட்டி நமசுத்ரா என்ற பெண்ணை திரு மணம் செய்ததற்காக ஆசிஷ் என்பவரை போலீ சார் கைது செய்ய வீட்டிற்கு சென்றனர். அவர் இல்லாத நிலையில் தந்தை திகேந்திராவை போலீசார் கைது செய்தனர். தனது மாமனாரை விடுவிக்க இரவு முழுவதும் கடும் குளிரில் காவல்நிலையத்தில் ஸ்வீட்டி நமசுத்ரா போராடினார். போராட்டம் ஏமாற்றத்தில் நிறைவடைய நள்ளிரவு கடும் குளிரில் வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்த பொழுது கடும் குளிரை தாங்க முடியாமல் 2 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி இறந்திருந்தது.
3.தெற்கு சல்மாரா மாவட்டத்தில் உள்ள ஜௌதங்கா புபெர் கிராமத்தில் குஷ்பு பேகம் என்ற விதவைப் பெண் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
4.கச்சார் மாவட்டத்தில் உள்ள காஸ்பூர் கிராமத்தில் கைது நடவடிக்கைக்கு பயந்து, காதலித்த நபரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்த பொழுது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் உறுதியளித்தனர். ஆனால் தற்போது பாஜக அரசு அரங்கேற்றி வரும் ஒடுக்குமுறைக்கு பயந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவே, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆவணங்கள் இருந்தாலும் கைது
18 வயதிற்குட்பட்ட பெண்களை திருமணம் செய்த நபர்களை கைது செய்ய வீட்டிற்கு செல்லும் பொழுது முதலில் பெண்களின் வயது சான்றிதழ்களை போலீசார் கேட்கின்றனர். ஆனால் அதனை பெயரளவில் மட்டுமே பார்த்து விட்டு இது சட்டவிரோத திருமணம் என்று கூறி கைது செய்கின்றனர். எழுத்தறிவு இல்லாதவர்கள் வேறு வழியின்றி காவல்துறையினர் சொல்படி செல்கின்றனர்.
சற்று விவரமானவர்கள் தட்டி கேட்டால் போலீசார் குடும்பத்தினர் முன்னிலையிலேயே அடித்து, உதைத்து இழுத்துச் செல்கின்றனர். கிருஷ்ணாநகரில் மகனுக்கு பதிலாக கைது செய்து விடுவிக்கப்பட்ட திகேந்திரா கூற்றுப்படி,”காவல்துறையினர் காகிதங்களைப் பார்க்கவில்லை. ஆவணங்கள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று போலீசார் சொன்னார்கள். மேலும் எங்கள் மகன் மற்றும் மருமகளும் காவல்நிலையத்திற்கு வர வேண்டியிருந்தது” என பரிதாபமாக கூறினார்.
முஸ்லீம்கள் மட்டுமே குறி?
அசாம் மாநிலத்தில் மொத்தம் 31 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் பிஸ்வநாத், பார்பேடா, பக்சா, துப்ரி, ஹோஜாய், போங்காய்கான் மற்றும் நாகோன் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டுமே குழந்தை திருமண தடுப்பு என்ற பெயரிலான கைதுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பார்பேடா, துப்ரி, ஹோஜாய், நாகோன், போங்காய்கான் மாவட்டங்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியாகும்.
பிஸ்வநாத், பக்ஸா மாவட்ட பகுதிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லீம் சமூக மக்கள் பரவலாக வாழுகின்றனர். 31 மாவட்டங்கள் இருந்தும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 7 மாவட்டங்களில் மட்டும் அதிரடி நடவடிக்கை எடுப்பது பாஜக மாநில அரசின் அப்பட்டமான மதப் பாகுபாடே என கண்டனங்கள் எழுந்துள்ளன.
2026 தேர்தலா? வங்காளி முஸ்லிம்களை ஒழிக்கவா?
அசாமில் வங்காளி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம்கள் பரவலாக உள்ளனர்.இவர்கள் அசாமில் பெரும்பாலும் “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அசாமில் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர்.
குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் வங்காளி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம்களையும், மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் மிரட்டுவதற்காக அசாம் பாஜக அரசு இதனை மேற்கொள்வதாக கல்வியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கருத்து கூறியுள்ளனர். சிலர் வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலுக்காக முஸ்லீம் மக்களை ஒடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும் புல்டோசர்கள் முஸ்லீம்களை குறிவைத்தன என்றால் அசாமில் குழந்தைத் திருமணத்தை தடுக்கிற போர்வையில் முஸ்லீம்களை குறிவைத்து அடிக்கிறது பாஜக அரசு.
–தீக்கதிர் நாளிதழிலிருந்து..