1980 களில் தமிழ் நாடு எங்கும் மிமிக்கிரி கேசட் ஒன்று மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது அதை எத்தனை முறை கேட்டாலும் சிரிப்பை அடக்க முடியாது ,MGR சிவாஜி ரஜினி கமல் என எந்த மிமிக்கிரி ஆர்டிஸ் முயற்சி செய்ய முடியாத குரலான வாகை சந்திரசேகர் வரை தத்ரூபமாக மிமிக்கிரி கலைஞர்கள் இருவர் பேசி வெளியிட்டனர். அதில் ஒருவர் மயில் சாமி மற்ற ஒருவர் யாரென தெரியவில்லை(லட்சுமன் ஸ்ருதி சகோதரர்களாக இருக்கலாம்) அந்த கேசட்டின் பெயரும் மறந்துவிட்டது.
பின்னர் சிறுசிறு வேடங்களில் மயில் சாமியை அன்றைய திரைப்படங்களில் பார்க்கலாம் திரையில் மிக சிறிய தோற்றமாக இருந்தாலும் தன் நகைச்சிவையை முத்திரைப்பதிப்பார். என் ஞாபகங்களில் அபூர்வ சகோதரர்கள் படம் கமலுடன் நடித்தது அவரை கவனிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும்..’என்னருகில் நீ இருந்தால்’ படம் எனக்கு இவர் அடுத்து மிகப்பெரிய காமெடியனாக வருவார் எனத் தோன்ற வைத்தது. அப்போது ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில் கொடிகட்டி பறந்த காலம்.
பின்னர் நான் சென்னை வந்து வட பழனியில் வாய்ப்புகளுக்காக தங்கிய போது அவரை பல முறை காலை நடை பயிற்சியின் போது பார்த்திருக்கின்றேன். பேச ஆசை ஆனால் திரைப்பட நடிகர்களிடம் அறிமுகமில்லாமல் பேசுவது கிடையாது. காரணம் அவர்களிடம் பலரும் அவர்களின் சந்தர்ப்ப சூழலை புரிந்து கொள்ளாமல் பேசுவர். அது அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும்.
நான் நாசர் சாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது ‘மாயன்’ படத்தில் நடிகை ரோஜாவின் உதவியாளரக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் நாளில் வசனம் சொல்லிக் கொடுக்க அவரிடம் அறிமுகமானேன். வசன பேப்பரை கொடுத்தவுடன் ‘ தம்பி.. எனக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாது நீங்க சொல்லுங்க புடிச்சுகிறேன்..’ என்றார் ஆச்சரியமாக இருந்தது என்னிடம் வாசிக்கச் சொல்லி கேட்டு Take யில் அதை அப்படியே திருப்பி சொல்லாமல் அதனுடன் அவரின் பங்கையும் சேர்த்து சொல்லி கலக்குவதை பார்த்திருக்கின்றேன்.
கதையை தயாரிப்பாளர்களிடம் சொல்லும் போது நான் பொதுவாக கதாபாத்திரங்களாக நான் மனதில் உருவகப் படுத்தியுள்ள நடிகரின் பெயரை சொல்லித்தான் கதை சொல்லுவேன். என் முதல் படமான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ இல் நாயகன் நாயகிக்கு ரயிலில் போலி பெயரில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் கதாபாத்திரத்தை ‘மயில் சாமி’ என்ற பெயரிலேயே அவரை குறிப்பிட்டே கதை சொன்னேன். அதை அப்படியே அவரை நடிக்க வைத்தனர் ஆஸ்கார் மூவிஸ். மயில் சாமி அவர்களை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
பொதுவாக மூத்த திரைப்பட நடிகர்களை ‘சார்’ என்றே அழைப்பேன் ஆனால் மயில் சாமி அவர்களை சந்தித்த நாளிலிருந்து ‘அண்ணே’ என்றே அழைக்க ஆரம்பித்தேன் …நான் உதவியாளராக இருந்த போது இருந்த அதே நகைச்சுவை உணர்வுடன் ஹைதராபாத் ராமாஜிராவ் படப்பிடிப்பு தளத்தில் இரவு முழுவதும் இரண்டே நாளில் நடித்துக் கொடுத்தார். உடன் இயக்குநர், நடிகர் என் நேசத்திற்குரிய பாண்டியராஜன் சாருடன் அவர் தன் பழைய அனுபவங்களை பகிர்ந்த நாட்களை மறக்க முடியாது . மயில் சாமி அண்ணனின் திரை அறிமுகம் பாண்டியராஜான் சார் இயக்கிய ‘கன்னி ராசி’ என்பதை இருவரும் பெருமையாக பகிர்ந்து கொண்டனர் (ஆனால் ‘தாவனி கனவுகள்’ முதலில் வெளியானது).
பின்னர் பல சந்தர்ப்பங்களில் மயில்சாமி அண்ணனை சந்தித்தாலும் அதே அன்பு.. யாருக்காவது அறிமுக நடிகருக்கு நடிக்க வாய்ப்பு கேட்பார். கடைசியாக ஒரு ஹோட்டலில் சந்தித்தோம் தன் மகனை அறிமுகம் செய்து வைத்தார், பின்னர் தொலைகாட்சியில் பல விவாதங்களில் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். வாசிப்பு பழக்கம் இல்லாதவர். அவர் முன் விவாதிக்கும் உலக அரசியல் படித்த யாராக இருந்தாலும் எதார்த்தமாக சக குடிமகனாக பேசி வெற்றி பெறுவார். அவரின் நிலைப்பாடு சாதி மதம் மற்றும் சமூக ஏற்ற தாழ்வு கடந்த இடது சாரி நிலைப்பாட்டிலேயே இருப்பார்.
அதே போல யார் ஆட்சி செய்தாலும் மாநில கட்சியை தீவிரமாக ஆதரிப்பவர். பொதுவாக திரை நாயகனை தன் வழிகாட்டி என்று கூறுபவர்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதில் மயில் சாமி அண்ணே ஒரு விதிவிலக்கு என்பேன். அவர் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் பள்ளி கூடத்தில் தன் கால் பட்டதில்லை, தாய் மொழி கூட எழுதக் கூட தனக்குத் தெரியாது என்பார். கேட்டால் பள்ளி வாத்தியாரிடம் படிக்காத எல்லாத்தையும் திரை வாத்தியார் ‘MGR’ ரிடம் படித்ததாக கூறுவார். மிமிக்கிரி கலைஞன், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் , அரசியல் விமர்சகர் ( சுயேட்சி வேட்பாளர்), சமூக செயற்பாட்டாளர், ஆன்மிகவாதி, உலகில் பல நாடுகள் சென்ற பயணி, உணவு ரசிகர்..எல்லாவற்றையும் கடந்து ஈகை குணம் கொண்டவர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்… உண்மையில் மிகப் பெரிய இழப்பு ..
‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் அவர் பேசும் வசனத்தில் வரும் ‘ சார்…நீங்க ஐயப்பன் கோயிலுக்கு பத்து முறை மாலை போடுங்க பன்னெண்டு முறை மாலை போடுங்க ஆனால் சட்டை மேல் பட்டனை போடுங்க..’ என்பார் அது தான் அவரின் கொள்கை மதம் இனம் சாதிக்கு பட்டன் போட்டு மூடிக் கொண்டு வெளியே மனிதனாக வாழ்வோம் உதவுவோம் என்பது… மெத்த படித்தவர்களுக்கு படிக்காத மயில் சாமி அண்ணே வாத்தியார் தான் …
உங்களை என்றும் மறக்க மாட்டோம் வாத்தியாரே ..🙏🙏🙏
நடிகர் விவேக் மயில்சாமியை பற்றி பேசிய சுவையான உரை கீழே..