கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக,ஓர அறிவியலாளர் பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட நவீன கைபேசி ஒன்றை உருவாக்குகிறார்.
அதை பல கோடிக்களுக்கு விற்றுப் பணம் பார்க்க வேண்டும் என பகவதி பெருமாள் ஆசையில் மண்ணைப்போட்டு திருட்டுப்போகிறது.
சிம்ரன் என்று பெயர் கொண்ட அந்த கைபேசி,உணவு விநியோக வேலை பார்க்கும் நாயகன் சிவாவிடம் கிடைக்கிறது. அதன்பின் அவர வாழ்க்கை மாறுகிறது.
அந்த கைபேசி பெண்ணுக்கு சிவாவின் மீது காதல் வருகிறது. அதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைச் சிரிப்பு கலந்து சொல்லியிருக்கிறது படம்.
நாயகன் சிவாவின் இயல்பான உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியன இந்தத் திரைக்கதைக்கும் காட்சியமைப்புகளுக்கும் சரியாகப் பொருந்தி சிரிக்க வைக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடகர் மனோ நடித்திருக்கிறார்.இது முழுக்க முழுக்க நகைச்சுவைக் கதை என்பதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கைபேசிப்பெண் மேகா ஆகாஷ் அழகான முகபாவனைகளால் கவர்கிறார்.அங்குமிங்கும் அலையாமல் அரங்குக்குள் இருந்து எதிரே யாருமில்லாமல் நடித்தபோதும் அது தெரியாத மாதிரி நன்றாக நடித்திருக்கிறார்.
இன்னொரு நாயகி அஞ்சு குரியனும் இயல்பாக நடித்துள்ளார்.
மாகாபா ஆனந்த், கேபிஒய் பாலா, சாரா, பகவதி பெருமாள் ஆகிய அனைவருமே நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் அதற்கேற்ப நடித்துள்ளார்கள்.
லியோன் ஜேம்ஸ் இசையில் ‘ஸ்மார்ட்போன் சென்யோரிட்டா’ பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு தேவையான அளவு இருக்கிறது.
ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கொஞ்சம் அசந்தால் பெரும் பலவீனம் ஆகியிருக்கும் கணினிவரைகலைக் காட்சிகளை அனைவரும் ஏற்கும்படி கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் ஷா பி என், வித்தியாசமான கதைக்களத்தை வைத்துக்கொண்டு இரசிகர்களைச் சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம் என செயல்பட்டிருக்கிறார்.
இதனால் திரைக்கதை மற்றும் காட்சிகளில் உள்ள தவறுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்துவிட்டு வரலாம்.
– அரவிந்த்