கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் இறந்ததற்கு திமுக தான் காரணம் என்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துகிறது பாஜக! தமிழ்நாட்டை தவிர்த்து இந்திய ஊடகங்களிலும் அது தான் தலைப்புச் செய்தி.
ரிபப்ளிக் டிவியில் ப்ரைம் டைம் செய்தியாய் மாற்றப்பட்டு அண்ணாமலை திமுக ராணுவ வீரர்களுக்கு எதிரான கட்சி என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார். தஞ்சையில் கிறித்துவ மாணவி இறந்த விவகாரத்தை அரசியல் நோக்கில் திசை திருப்பி அதையும் தலைப்பு செய்தியாய் பாஜக மாற்றியது நினைவில் இருக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தான் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் எந்தவித சலனமும் இல்லாமல் ஹெச். ராஜா சர்மா, அண்ணாமலை இருவரும் ஊக்குவித்து, வாழ்த்து தெரிவித்து வெளியாகியிருக்கும் பகாசுரன் படத்துக்கான தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டிவி வாங்கி இருக்கிறது.
ஊடகம் எவ்வளவு முக்கியமான ஆயுதம் என்பதை தந்தை பெரியார் உணர்ந்திருந்ததால் தான் பத்திரிக்கைகள் நடத்துவதை அரசியலின் மிக முக்கிய பணியாய் கையாண்டு வந்தார். சாமனியர்களுக்கு ஒரு ஊடகம் வேண்டும் என்று தான் தினத்தந்தியை தொடங்கி வைத்தார். மக்களுக்கு கருத்தை சென்று சேர்க்கும் எல்லா வடிவத்தையும் கையில் எடுத்தார். அப்படித்தான் நாடகம் மற்றும் சினிமாவையும் அரசியல் களமாய் திராவிட இயக்கம் மாற்றியது. கலைஞர் கருணாநிதி பராசக்தி படத்துக்கு வசனம் எழுதியதும் அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதெல்லாம் ஊடகத்தில் திராவிட இயக்கம் செலுத்திய ஆளைமையின் பயன்கள் தான். அதன் நீட்சியாய் தான் இந்தியாவில் முதல் பார்ப்பனரல்லாத அரசாங்கத்தை அறிஞர் அண்ணாவால் 1968 ல் அமைக்க முடிந்தது. 1930 கள் தொடங்கி தமிழ்நாட்டின் இதழிலியல் வரலாற்றை படித்தோமேயானால் 60, 70 களில் அது உச்சம் பெற்ற காலகட்டம் தான் திமுக ஆட்சியமைத்த காலகட்டம்.
90 களில் சன் டிவி தொடங்கப்படுகிறது. மாநில சுயாட்சி என்று புத்தகம் எழுதிய முரசொலி மாறனின் தொலைகாட்சி என்பதால் அது திமுக வின் தொலைகாட்சி தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதில் என்ன மாதிரியான நிகழ்சிகள் ஒலிபரப்பப்பட்டன? பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கழித்துவிட்டு பார்த்தால் ஆன்மீகம் என்ற பெயரில் மகாபாரதம், விநாயகர் போன்ற ஆரிய பண்பாட்டு புகுத்தல்கள் தான் சன் டிவி ஏற்படுத்திய சமூக விளைவு. அடுத்து கலைஞர டிவி! 2009 ல் தமிழீழப் போர் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் மானட மயிலாட ஒளிபரப்பியது தான் அதன் ஆகப்பெரும் சாதனை. அதற்கடுத்து இந்துத்துவ, பிற்போக்குத்தன படைப்பான பகாசுரனை வாங்கி அதை ப்ரைம் டைமில் ஒளிபரப்புவது.
திராவிடம் எங்கே தடுமாறுகிறது என்று தெரிகிறதா? மக்களிடம் சென்றடைய அதற்கு சரியான வழிமுறைகள் இல்லை. மகாபாரதத்தை தொடராக எடுத்து ஒளிபரப்பத் தெரிந்த சன் டிவிக்கு ஏன் நீதிக் கட்சி வரலாற்றை தொடராக மாற்றத் தெரியவில்லை. அவ்வளவு கூட வேண்டாம். பகாசுரனை வாங்கத் தெரிந்த கலைஞர் டிவி க்கு ஏன் அயலி தொடரை வாங்கி ஒளிபரப்ப முடியவில்லை. 2002 ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை மக்கள் மத்தியில் திரையிட மே 17 இயக்கம் அனுமதி கேட்ட பொழுது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருமென்று ஸ்டாலின் அவர்களின் கீழ் இயங்கும் தமிழ்நாட்டு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது பாஜக ரவுடிகளை வைத்து கலவரம் செய்யும் என்பதால் இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை செய்யக் கூடாது என்று பொருள். இது யாருக்கு சாதகமாய் முடியும் என்று ஊருக்கே தெரியும்.
2018 ல் ஆனந்த விகடன் விருது விழாவில் ஸ்டாலினை வைத்து கொண்டு திருமுருகன் காந்தி, ‘திராவிட இயக்கம் 3200 பத்திரிக்கைகளை நடத்தி வந்தது’ என்று சொன்னார். ஊடகம் தான் அரசியலை தீர்மானித்து என்பது அதன் பொருள்.
தமிழ்நாட்டு ஊடகங்கள் திராவிட சார்பை விட்டு பொழுதுபோக்கு என்ற அளவில் விலிகி நின்றால் அரசியலற்ற மக்கள் வலதுசாரி அரசியலை நோக்கி தான் நகர்வார்கள்.
தொழிலில் அரசியலை கலக்க வேண்டாம் என்று இதற்கெல்லாம் முட்டு கொடுத்தால் நாளை தொழிலும் இருக்காது, அரசியலும் இருக்காது. அரசியலும் அதை சார்ந்தோரின் தொழிலும் தனித்தனியன்று. குறிப்பாக அப்படி யாராவது உங்களிடம் சொன்னார்களென்றால் அவர்கள் உண்மையில் நீங்கள் அழிய வேண்டும் என்று நினைக்கும் துரோகிகளாக இருப்பார்கள் அல்லது உங்களிடத்தில் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தகுதியற்ற தற்குறிக்களாக இருப்பார்கள்.
ஆட்சி அதிகராத்தில் இல்லாத போதே திராவிட இயக்கம் கிட்டத்தட்ட 3200 பத்திரிக்கைகள் நடத்தியது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்கிற திமுக அதிகாரத்தில் இருக்கும் இந்த நேரத்தில் திராவிட கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்ல எத்துனை வெகுசன ஊடகங்களை வைத்திருக்கிறது?
–சமரன் ரமேஷ்