தாழ்த்தப்பட்ட மக்கள் ‘காதல் நாடகம்’ என்ற போர்வையிலும், அரசு அளிக்கிற சலுகைகளைக் கொண்டும் பிற்படுத்தப்பட்ட மக்களை நசுங்குகிறார்கள் என்ற ‘அறிவு பூர்வமான’ கருத்தை மையமாக வைத்து ‘திரவுபதி’, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை எடுத்த மோகன் ஜி என்ற இயக்குனர் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக கூறிக்கொண்டு, ஜாதி இயக்குனர் என்ற அடையாளத்தை மாற்ற வேண்டும் என்பதாக கருதிக் கொண்டு தற்போது ‘பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து, வெளியிட்டு இருக்கிறார்
இந்தப் படத்தை பார்க்காதவர்களுக்கு சின்னதாக கதை சுருக்கம்…
தெருக்கூத்து கலைஞனாக இருக்கும் செல்வராவனுக்கு ஒரே மகள். அவள் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்க விரும்புகிறார். தந்தையும் ஒருவித தயக்கத்தோடு கல்லூரிக்கு அனுப்புகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் மகள், பக்கத்து ஊரு இளைஞனை காதலிக்கிறார். அந்த இளைஞன் மகளின் பிறந்த நாளின் போது நள்ளிரவு நேரத்தில் விடுதியில் நுழைந்து, கேக் வெட்டி காதலியின் பிறந்தநாளை கொண்டாடுகிறான். அந்த சந்திப்பின் போது காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
இதை விடுதி வாட்ச்மேன் செல்போனில் வீடியோவாக எடுத்து விடுகிறார். மறுநாள் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அவளின் தங்க சங்கிலியைப் பறித்துக் கொள்கிறான். இன்னொரு நாள் விடுதி பெண் வார்டன், அதே வீடியோவை காட்டி பேராசிரியர் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளச் செல்கிறார். இன்னொரு நாள் “கல்லூரியில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் நீ என்னோடு படுக்க வேண்டும்” என்கிறார் தாளாளர். வேறு வழியே இல்லாமல் படுத்து விடுகிறார் அந்த மகள். மறுநாள் வந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மகளின் சாவுக்கு நீதி கேட்டு புறப்படும் தந்தை அவள் வாழ்வை நாசமாக்கியவர்களை எல்லாம் கொடூரமாக கொலை செய்கிறார். இதுதான் படத்தின் கதை.
இந்த கதையை மேலோட்டமாக பார்த்தால் மகளின் வாழ்க்கையை நாசமாக்கியவர்களை தந்தை பழிவாங்குவதுதானே முறை, நியாயம், நீதி என்று யோசிக்கத் தோன்றும்
இதில் ஒரு நுட்பமான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அதை வீடியோ எடுத்து ஒருவன் மிரட்டினால் “தாராளமாக அதை வெளியிட்டுக் கொள் என் காதலனைத்தானே முத்தமிட்டேன்” என்று துணிச்சலுடன் அதனை அவள் எதிர் கொண்டிருக்க வேண்டும். அப்படி எதிர்கொள்கிற வகையில் தன் மகளை அந்த தந்தை வளர்த்திருக்க வேண்டும்.
கல்லூரி இளங்கலை படிப்பு முடித்த உடனேயே திருமணம் செய்து வைக்க துடிக்கும் சராசரி தந்தை, மேல்படிப்புக்கு தயக்கத்துடன் அனுப்பி வைக்கும் பிற்போக்கு தந்தை அவன்.
கூட்டி கழித்துப் பார்த்தால் மகளின் வாழ்க்கையை சீரழித்தவர்களுக்கு சற்றும் குறைவில்லாதவன் அந்த தந்தை. அப்படிப்பட்டவன் ஏன் பழிவாங்கச் செல்ல வேண்டும். அப்படி செய்வதாக இருந்தால் அவன் முதலில் தன்னைத்தானே கொன்று செத்திருக்க வேண்டும். இதுதான் நியாயம், இதுதானே நீதி.
பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை வைத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களை அடிமையாக்கி வைத்து, அவளே தெய்வம், அவளே புனிதம். அந்த புனிதம் ஒரு முத்தத்தால் கெட்டுவிடும், ஒரு கட்டிப்பிடித்தலால் கெட்டுவிடும் என்று கற்பித்து, அதன் காரணமாக அவள் ஒரு சிறிய பிரச்சினையைகூட எதிர் கொள்ள முடியாமல் போய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்வது பெண் அடிமைத்தனத்தின் இன்னொரு போதிப்புதானே.
காதலன் முத்தம் கொடுத்தது வெளி உலகத்துக்கு தெரிந்தால் அவமானம் என்று கருதும் மகள், பள்ளி தாளாளர் படுக்கைக்கு அழைத்தவுடன் படுக்க சென்று விடுகிறாரே ஏன்? தனது ஒரு சிறிய தவறுகூட வெளியில் தெரிந்து விடக்கூடாது எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் தெரியாத வரை சரியே என்கிற பிற்போக்குத்தனமான அணுகுமுறைதான் இது.
இயக்குனர் மோகன் ஜி இதற்கு முன் எடுத்த ஜாதி படங்கள் ஒரு ஜாதியை உயர்த்தியும் ஒரு ஜாதியை இழிவு படுத்தியும் வெளிவந்தது. ஆனால் இந்தப் படம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே இழிவுபடுத்தியிருக்கிறது.
–வாட்ஸப் பகிர்வு. எழுதியவர் பெயர் தெரியவில்லை.