வட இந்தியர்கள் சென்னையில் அவ்வளவு நெருக்கடியாகவும், சுகாதாரமற்றும் இருக்கும் பொந்துகளில் தான் தங்கி வாழ்கிறார்கள். ஒரு சிறு அறையில் 5 முதல் 10 பேர் வரை இருக்கிறார்கள்.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை வாங்கப்படுகிறார்கள். அதற்கு 12 ஆயிரம் ரூபாய் சொற்ப சம்பளம். அதுவும் அனுபவஸ்தருக்கு. புதிதாக சேர்ந்தால் இன்னும் குறைவு. வட இந்தியாவில் 6 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைப்பதாகவும் இங்கே 12 ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் நல்ல வசதியாக இங்கே உணர்வதாகவும் சொல்கிறார் வட இந்திய தொழிலாளி. பாவமாய் இருக்கிறது.
தமிழன்கள் சோம்பேறிகளாகிவிட்டார்கள் என்று ஸ்டைலாக பேட்டிகள் கொடுக்கும் பெரும் தொழிலதிபர்கள் யாரும் தாங்கள் இப்படி தொழிலாளர்களை குறைந்த ஊதியம் கொடுத்து உழைப்புச் சுரண்டலும் செய்வதை சொல்வதேயில்லை. இதுதான் முதலாளிகள் போடும் நாணயஸ்தன் முகமூடி.
ஆறுமாதம் இங்கே வேலை செய்து ஆறுமாதம் அங்கே போய்விட்டு வருபவர்கள் உண்டு.
அங்கிருந்து இங்கே வேலைக்கு எடுப்பதற்கென்றே புரோக்கர்கள் பெருகிவிட்டார்கள். விமானத்தில் ஆட்களை கூட்டி வருமளவு தேவை இருக்கிறது. இந்த புரோக்கர்கள் போடும் கண்டிஷன்களில் 12 ஆம் வகுப்புக்கு கீழே படித்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.
படிக்காதவனைத் தானே பிஎப், இன்சூரன்ஸ், மெடிக்கல் என்று எந்தவித அடிப்படை உரிமையும் தராமல் ஏமாற்ற முடியும் ?
நன்றாக பெரிய அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியாக 5 வருடமாக இங்கே பணியாற்றி வந்த ஒரு வட இந்தியர் ஒரு நாள் அதிகாலை ரவுண்ட் வரும்போது ஸ்ட்ரோக் வந்து விழுந்துவிட்டார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்து ஏதோ சில லட்சம் கொடுத்து மனைவியை வடஇந்தியாவிலிருந்து வரவழைத்து ரயிலேற்றி அனுப்பி விட்டார்கள்.
அவ்வளவு தான். அந்தக் குடும்பம் இனி அம்போ.
ஆண்கள் மட்டுமல்ல 18 முதல் 21 வயது வட இந்தியப் பெண்களும் இப்படி அழைத்து வரப்பட்டு கொடுமையான சூழலில் உடலுழைப்பு வேலை வாங்கப்படுகிறார்கள்.
சென்னையில் மட்டுமே பத்து லட்சம் பேர் வரை வட இந்தியர்கள் இப்படி வாழ்கிறார்கள். தமிழ்நாடெங்கும் சுமார் 60 முதல் 70 லட்சம் பேர் வரை இருக்கலாம் என்கிறார்கள். இது எங்கு போய் முடியும் ?
வட இந்தியாவில் தனியார் பிச்சைக் காசு போல 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதை தட்டிக் கேட்காத அந்த மாநில அரசுகளும், இங்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்கும் தமிழர்களை ஒதுக்கி விட்டு வட இந்தியர்களை பணியமர்த்தும் முதலாளிகளை தட்டிக் கேட்காத மாநில அரசுகளும் ஜனநாயகத்தை காக்கும் லட்சணம் இதுதான்.
இதில் பல்வேறு பெரும் தொழில்கள் தமிழ்நாட்டிலும் வட இந்திய முதலாளிகள் கையில் இருப்பது உழைப்புச் சுரண்டலை இன்னும் உக்கிரப்படுத்துகிறது. விவசாய அறுப்புக்குக் கூட காண்ட்ராக்டர்கள் மூலம் சல்லிசான சம்பளத்தில் வேலை செய்ய வட இந்தியர்கள் கிடைக்கிறார்கள்.
இங்கே வந்து வேலை செய்யும் வடக்கன்ஸ் தமிழக, வட இந்திய முதலாளிகளால் எவ்வளவு கேவலமாக உடலுழைப்பு சுரண்டப்பட்ட பரிதாபமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கும் வீடியோ இது. பாருங்கள்.