ராணுவத்தில் விமானப்படை வீரராக இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாகிறார் உபேந்திரா. தாதாக்களுடனும் காவல்துறையுடனும் கடும் மோதல் செய்கிறார். இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? உபேந்திரா எப்படி தாதா ஆனார் என்று உலகம் பூராவும் இருக்கும் தாதா படங்களின் இன்னொரு புதிய மாவு தான் கப்ஜாவின் கதை.
இந்தியாவே மிரளும் தாதா என்பதற்கு மிகப்பொருத்தமாக கெட்டப்பில் இருக்கிறார் உபேந்திரா. ஜிம் உடற்பயிற்சி உடல், துடிப்பான நடிப்பு ஆகியனவற்றால் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயாவும் குறைவைக்கவில்லை. நடனம் நடிப்பு என எல்லா மசாலாக்களையும் சரியாகச் செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கிச்சாசுதீப் அதற்கேற்ற கம்பீரமாக இருக்கிறார். சிறப்புத்தோற்றத்தில் வரும் சிவராஜ்குமார் வரும் காட்சிகளும் படத்துக்குப் பலம்.
முரளிசர்மா, நவாப்ஷா,ஜான்கொக்கேன், கோட்டாசீனிவாசராவ்,தேவ்கில் உட்பட படத்தில் ஏராளமான நடிகர்கள். ஒருமுறைக்குப் பலமுறை பார்த்தால்தான் இவர்களைப் பற்றியெல்லாம் புரிந்துகொள்ளமுடியும் எனுமளவுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் அதிரடியாக இருக்கிறது.
ஏ.ஜெ.ஷெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
ரவிபஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கலாம். கொஞ்சம் அதிகமாகவே பின்னணி இசைத்திருக்கிறார்.
இயக்குநர் சந்துரு, உபேந்திராவை வைத்து ஒரு பெரும் விளையாட்டை விளையாடியிருக்கிறார். கன்னடத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தைப் போன்றே உள்ள கதை என்றாலும் காட்சிகளில் இருக்கும் பிரமாண்டம் இரசிகர்களை பார்க்க வைக்கலாம்.
உபேந்திரா, ஸ்ரேயா, கிச்சாசுதீப் உள்ளிட்ட நடிகர்களும் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகளும் இருந்தாலே போதும் என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டார். கொடுக்கிற பணத்துக்கு இதுபோதும் என்று இரசிகர்களும் நினைக்குமளவுக்குப் படம் இருக்கிறது.
படத்தின் தலைப்பு முதல் நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் இது டப்பிங் படம் என்பதை நினைவூட்டுகிறார்கள்.
– குமார்