காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான மகனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனிக்கு திடீர் சோதனையாக மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம்.
அதற்காக மருத்துவமனை செல்லும்போது அங்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்குகிறார் விஜய் ஆண்டனி. அதற்காக அவர் அதிரடியாக ஒரு செயலைச் செய்கிறார். அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் படம்.
காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் ஏற்கெனவே நன்றாக நடித்துப் பெயர் வாங்கிய விஜய் ஆண்டனி, இந்தப்படத்திலும் அதைத் தக்க வைத்துக் கொள்கிறார். அதிரடிக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் இல்லாத அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
அன்பான மனைவி வேடத்துக்கு அளவெடுத்துச் செய்தது போலப் பொருத்தமாக இருக்கிறார் ரம்யா நம்பீசன்.மகனுக்கு ஒரு சோதனை என்றதும் கலங்குமிடத்தில் நம்மையும் கலங்க வைக்கிறார்.
விஜய் ஆண்டனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் பிரணவ், சிரிப்பால் கவர்கிறார்.
யோகிபாபு,ரோபோ சங்கர் ஆகியோர் இருந்தும் நகைச்சுவை குறைவாக இருக்கிறது.
சுரேஷ்கோபி, ராதாரவி, சோனுசூட் உட்பட ஏராளமான நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.அவர்களால் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.
ஆர்.டி/ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தைக் காட்சிகளில் உணர்த்துகிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் குறைவைக்கவில்லை.
புவன்சந்திரசேகரின் படத்தொகுப்பில் இன்னும் கூர்மை இருந்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் பாபு யோகேஸ்வரன். மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் மையக்கதையோடு, கதாநாயகனுக்கு தமிழரசன் என்றும் அவருடைய மகனுக்கு கேப்டன் பிரபாகரன் என்றும் சுரேஷ்கோபிக்கு முருகானந்தம் என்றும் ராதாரவிக்கு சுகுமாரன் நம்பியார் என்றும் இவை அனைத்துக்கும் மேலாக மருத்துவமனைக்கு தாமரை மருத்துவமனை என்றும் பெயர் சூட்டியதிலேயே மிகப்பெரிய கதையைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மக்கள் அனைவரும் சமம் என்பதற்கு மாற்றாக அவர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் வாழச்சொல்லும் கொடூர அரசியல் சித்தாந்தத்தைத் தன் கலை மூலம் அம்பலப்படுத்தி பாராட்டுப்பெறுகிறார் பாபு யோகேஸ்வரன்.
– அன்பு