சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள்.
அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன்.
கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள்.
இந்தப்படத்தின் நாயகன் பெயருக்கு முன்னால் வரும் கழுவேத்திக்குக் காரணம் இதுதான்.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். அங்கிருக்கும் மேல் சாதி, கீழ் சாதி பாகுபாடு, அதனால் நிகழும் கொடுமைகள், அவற்றைத் தாண்டி நிலைக்கும் சாதி கடந்த மனிதம் ஆகியனவற்றை இந்தப்படம் சொல்கிறது.
படத்தின் தலைப்பிலிருக்கும் மூர்க்கன் அருள்நிதி. பெரிய மீசை முரட்டுத்தோற்றத்துடன் மூர்க்கனாகவே மாறியிருக்கிறார் அருள்நிதி. சண்டைக்காட்சிகளில் அபார உழைப்பு. காதல் காட்சிகளில் சட்டென்று மாறும் முகபாவங்களில் கைதட்டல் பெறுகிறார்.
ஒருத்தன் தலைக்கு மேல நீங்க இருக்குறதா நெனைக்கிறீங்க, ஆனா நீங்களே இன்னொருத்தன் காலுக்கு கீழ தான்னு சொல்றாங்க
என்று அருள்நிதி பேசும் வசனம் சாதிய அடுக்குகளை உருவாக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஆரியத்துக்குச் சம்மடி அடி கொடுக்கும் திராவிட மாடல்.
நாயகி துஷாராவிஜயன், இந்தப்படத்திலும் வரவேற்புப் பெறுகிறார். மூர்க்கனையே முட்டிப்பார்க்கும் சுட்டித்தனம் இரசிக்க வைக்கிறது.
படத்தில் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம், மூர்க்கனின் நண்பர் பூமிநாதனாக வரும் சந்தோஷ்பிரதாப். அவருடைய வேடமும் அதற்கு அவர் கொடுத்திருக்கும் மதிப்பும் சிறப்பு.
அவருக்கு இணையான சாயாதேவி அருமை. கலங்க வைத்துவிடுகிறார்.
முனீஸ்காந்த், ராஜசிம்மன், யார் கண்ணன், சரத் லோகித்தாஸ் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்டவை என்றாலும் தங்கள் நடிப்பால் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறார்கள்.
இமானின் இசை படத்துக்குப் பெரும்பலம். பின்னணி இசையில் அவரும் மூர்க்கனாகிவிட்டார்.
ஶ்ரீதரின் ஒளிப்பதிவு, கதைக்களத்தோடு காட்சிகளை விவரித்திருக்கிறது.
கே.கணேஷ்குமாரின் சண்டைப்பயிற்சி, அருள்நிதியின் உயரத்துக்கு உயரம் சேர்த்து சண்டைப்பிரியர்களுக்கு பெரு விருந்து படைத்திருக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் பேருண்மையை நிறுவ முன்வந்திருக்கிறார் இயக்குநர் கெளதம் ராஜ்.
அதேநேரம், மரணதண்டனை என்பது தண்டனையே அல்ல என்று சொல்லி அதற்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கழுவேற்றத்தைக் காட்சிப்படுத்தலாமா?
– குமார்