அந்த ஏழு நாட்கள், அழகி, சில்லுனு ஒரு காதல் என அவ்வப்போது, மலரும் நினைவுகள், அவை தந்த சுகங்கள், சமகாலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றைச் சொல்லி பார்ர்க்கும் அனைவரையும் ஏதோவொரு விதத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் படங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
அவற்றின் மையம் தீராக் காதலாகத்தான் இருக்கும். எனவே அந்தப் பெயரிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன்.
மனைவி ஷிவதா, குழந்தை விர்த்தி விஷால் ஆகியோரோடு, உயர்மத்தியதர வாழ்க்கை என்று போய்கொண்டிருக்கும் ஜெய்யின் வாழ்க்கையில் எதிர்பாரா விதமாக உள்ளே வருகிறார் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.
இந்த வேடத்துக்கு இவர்தான் பொருத்தம் என நினைக்கக்கூடிய நடிகர் ஜெய். அந்த எண்ணத்துக்கு ஏமாற்றம் தராமல் பொறுப்பாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யாராஜேஷுக்கு சவாலான வேடம். அதை அவ்வளவு இயல்பாக எதிர்கொள்கிறார். பல இடங்களில் கண்களிலேயே கட்டிப்போடுகிறார்.
ஷிவதா, இயல்பான மனைவி. கணவனிடம் ஏதோ தப்பிருக்கிறதென தெரிந்து பிடிக்கும் காட்சிகளில் பாராட்டுப்பெறுகிறார்.
அப்துல் லீ, அம்ஜத்கான் ஆகியோரும் தங்கள் பங்கில் குறை வைக்கவில்லை.
இது கண்களுக்குச் சொல்லப்படும் கவிதை என்றுணர்ந்து அதற்கேற்பப் படம் பிடித்து மகிழ்வூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம்.
சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுகம்.
பல் படங்களில் முக்கியமான விசயங்களை வசனங்கள் மூலம் கடந்துபோவது குறையாக இருக்கும். இந்தப்படத்தில் அது நிறைவாக அமைந்திருக்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையை எடுத்துக்கொண்டு அதை நளினமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன்.
– குமார்