ஒரு கிராமம், அங்கு நடக்கும் மர்ம மரணங்கள், அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன் என்கிற வழக்கமான விசயத்துக்குள் மர்ம மரணங்களுக்கான காரணம் தெரியவரும்போது வியப்பை ஏற்படுத்தும் படம் விரூபாக்ஷா.
நாயகன் சாய்தரம்தேஜ், தெலுங்கிலிருந்து இறக்குமதியாகி வந்திருக்கிறார். யுவதிகளைக் கவரும் அழகும் துடிப்பான நடிப்பும் அவருடைய பலம். முக்கியத்துவம் குறைந்த கதை என்றாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வாத்தியில் பார்த்த சம்யுக்தாதான் இந்தப்படத்தில் நாயகி. அமைதியாக மட்டுமின்றி முதல்நிலை நடிகைகள் போல் ஆக்ரோசமாகவும் வெளிப்பட்டிருக்கிறார். கதையின் மையமே தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ரவிகிருஷ்ணா, அஜய், சுனில் உட்பட படத்தில் நடித்திருக்கும் பலரும் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.
திகில் படங்களில் இரசிகர்களைப் பயமுறுத்தும் வேலையை ஒளிப்பதிவாளர் பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் சம்தத்தும் அதற்கு விதிவிலக்கல்ல.
அஜ்னீஷ் லோக்நாத் இசையில் பாடல் நன்றாக இருக்கிறது. காதல் காட்சிகளிலும் திகில் காட்சிகளிலும் அவருடைய பின்னணி இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
தெலுங்கின் பிரபல இயக்குநர் சுகுமாரின் திரைக்கதைக்கு தமிழில் வசனங்கள் எழுதிய வி.பிரபாகர் புதுவண்ணம் தருகிறார்.
இயக்குநர் கார்த்திக்வர்மா டண்டூ, பழகிய கதை பார்த்த காட்சிகள் ஆகியவை பெரும்பான்மையாக இருந்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர காட்சிகளில் வேகம் மற்றும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.
சிவபெருமானுக்கு இன்னொரு பெயர் விரூபாக்ஷாவாம். இந்த சிவபெருமான் பயமுறுத்துகிறார்.
பழகிய கதை, பழகிய திகில்கள் தான். முடிவுக்காக கொஞ்சம் பாத்துப் போங்க.
– குமார்