மலையாளத்தில் வந்து கலகலப்பூட்டிய திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ஊர்வசி, பாலுவர்கீஸ், கலையரசன், குரு.சோமசுந்தரம் ஆகியோரை வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதை மூலம் நல்ல கருத்தைச் சொல்ல முயலும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ்.

நாயகன் பாலு வர்கீஸுக்கு மாலைக்கண் குறைபாட்டினால் அவரது திருமணம் நிற்கிறது. வேலையும் பறிபோகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க முயல்கிறார்.  பணத்துக்கு பிரச்சனை வர, அப்போது, அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் பரம்பரையான விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள ஒரு கூட்டம் முன் வருகிறது.அதேநேரம், புதிய கோவில் ஒன்றைக் கட்டி அதில் அந்தச் சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள்.

வீட்டில் சும்மா இருந்த விநாயகர் சிலை மூலம் தனது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாலு வர்கீஸுக்கு அதே விநாயகர் சிலை மூலம் சில சிக்கல்கள் வருகின்றன. அவற்றிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? விநாயகர் சிலை என்னவானது? என்பதையெல்லாம் சொல்வது தான் படம்.

அப்பாவியான முகத்துடனும் அதற்கேற்ற நடிப்புடனும் வருகிறார் நாயகன் பாலுவர்கீஸ். தன் குறைபாட்டைத் தாண்டிச் சாதிக்கவேண்டுமென்ற துடிப்பு இரசிகர்களுக்கு உத்வேகம்.

படத்தின் தலைப்பில் வரும் சார்ல்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கலையரசன். கனமான கதையைச் சுமந்துசெல்வதில் கவனம் பெறுகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார் ஊர்வசி.அவருடைய படபடப்பு துடிதுடிப்பு ஆகியன அவருடைய வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் சிரிக்கவைக்க நினைத்திருக்கிறார் சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். ஊர்வசியின் நடிப்புத் திறமைக்கேற்ற அளவு பாத்திரம் இல்லை தான். 

குரு சோமசுந்தரத்திற்கு இந்தப்படத்தில் ஊர்வசியின் கணவர் வேலை.அந்த வேலையைக் கருத்தாகச் செய்திருக்கிறார். அவரால் அந்த வேடத்துக்குப் பலம்.

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கிறது.கதைக்களத்தை மாற்றிச் சொல்வதில் வெற்றி பெறவில்லை.

சுப்பிரமணியன் கே.வியின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.அளவான பின்னணி இசை படம் இலகுவாகச் செல்லப்பயன்பட்டிருக்கிறது.

கடவுள் சிலையை மையமாகக் கொண்ட கதையை எழுதி அதில், கடவுள் தொடர்பான தொழில்கள் இலாபம் கொடுப்பவை எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதாசுப்பிரமணியம். படம் குழப்பமான பல விஷயங்களைப் பற்றிச் சென்று விடுவதால் கதையைப் பின் தொடர்வதில் பார்வையாளர்களுக்கு தொய்வு ஏற்படுகிறது.

மதத்தின் மீதான குருட்டுத்தனமான நம்பிக்கைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பேச நினைத்த படம் அதை சரியாக பார்வையாளர்களுக்கு உணர்த்தத் தவறிவிடுகிறது. ஆழமான மத விஷயத்தை லைட்டாக காமெடி கலந்து கதையைப் பேச முயற்சிப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

– குமார்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.