கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் லவ்டுடே. அந்தப்படத்தின் நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார்.அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதைச் சொன்னதுதான் அந்தப் படம்.
இவ்வாண்டு அதற்கு ஈடாக வெளியாகியிருக்கும் இணையத் தொடர் பானிபூரி. இதில் நாயகன் நாயகி ஆகியோரின் காதலை அறிந்த நாயகியின் தந்தை, இருவரையும் திருமணத்துக்கு முன்பே ஏழு நாட்கள் சேர்ந்து வாழச்சொல்கிறார்.அதன்பின்னும் இருவரும் சேர்ந்து இருந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்தத் தொடர்.
ஏற்கெனவே பல படங்களில் முரட்டுத்தனமானவராக நாம் பார்த்த லிங்கா, இந்தத் தொடரில் அப்பாவியாக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான அந்த வேடம் தொடரின் கதைக்குப் பெரும்பலம். காதலைத்தாண்டிய ஆண் மனநிலை சிந்தனையுடன் அவர் சிந்திக்கும் காட்சிகள் கைதட்டல் பெறுகின்றன.
நாயகியாக நடித்திருக்கும் ஜம்பிகா, அடங்காத குதிரையாக வலம்வருகிறார். தோற்றப் பொலிவும் உடல்மொழியும் அவருக்கு வரவேற்பைக் கொடுக்கின்றன.
நாயகியின் தந்தையாக வரும் இளங்கோகுமரவேல், கதைப்படி எடுக்கும் முடிவு சர்ச்சைக்குள்ளானதாக இருந்தாலும் அவர் நடிப்பால் அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
வினோத்சாகர், ஸ்ரீ கிருஷ்ணதயாள், கனிகா, கோபால் ஆகியோரும் அவரவர் வேலையை நன்றாகச் செய்து, தொடர் இலகுவாகவும் நகைச்சுவையாகவும் செல்லப் பயன்படுகிறது.
பரந்து விரிந்த கதைக்களம் இல்லையென்றாலும், மிகவும் கட்டுப்பாடான இடங்களுக்குள் படம் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்றாலும் அதைக் கச்சிதமாகக் காட்டி தொடரை சலிப்பில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.
பின்னணி இசையில் தொடரின் கருத்துகளுக்குப் பலம் சேர்த்து இரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தர்.
எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.இது காட்சி ஊடகத்தில் வெளியாகும் படைப்பு என்பதை மறந்தது பலவீனம்.ஆணை நீராகவும் பெண்ணை பூரியாகவும் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய விசயத்தை எடுத்துக் கொண்டு அதை மிக நாகரிகமாகக் கையாண்டிருக்கிறார். காதல் காட்சிகள் அதற்கு நல்ல சான்று.இது தொடரின் பலம்.
அதோடு நில்லாமல் அழகுக்கு விளக்கவுரை, காதலன் காதலி மட்டுமின்றி தம்பதியருக்கும் சொல்லியிருக்கும் அறிவுரை ஆகியன சிரிப்போடு சிந்திக்கவும் வைத்திருப்பதால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கப் பரிந்துரைக்க வைக்கும் தொடர்.
– குமார்
பின்குறிப்பு – இத்தொடர், ஷார்ட்பிளிக்ஸ் (ShortFlix) ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.எட்டு பாகங்களைக் கொண்டிருக்கிறது.