வைஜெயந்தி மூவீஸின் காவிய திரைப்படமான கல்கி 2989ஏடி, திரைப்படம், சான் டியாகோ காமிக்-கான் விழாவில் மைய அரங்கைப் பிடித்து, வரவேற்பைக் குவித்துள்ளது !
“கல்கி 2989 ஏடி” திரைப்படம் சான் டியாகோ காமிக்-கானின் ஹால் எச் அறிமுகத்தில் பலத்த கைதட்டலுடன், பெரிய வரவேற்பைப் பெற்றது !!
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான கல்கி2989ஏடி, புகழ்பெற்ற ஹால் ஹெச் சான் டியாகோ காமிக்-கான் (SDCC) இல் அறிமுகம் செய்யப்பட்டது, இத்திரைப்படம் அங்கிருந்த பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. பலத்த கைதட்டல்களால் அவர்கள் படத்தின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். புகழ்பெற்ற சர்வதேச காமிக்-கானில் பங்கேற்கும் முதல் இந்தியத் திரைப்படமாக கல்கி2989ஏடி திரைப்படம் சரித்திர சாதனை படைத்துள்ளது.
பார்வையாளர்களுக்கு இப்படம் மறக்க முடியாத காட்சி விருந்தளித்ததால், காமிக் கான் ஹால் ஹெச்சில் அந்த சூழலே படு உற்சாகமாக இருந்தது. மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி மேளக்காரர்கள் மற்றும் பெண்கள் அணிவகுத்து மேடையில் சடங்குடன் நடனமாடினர், இது அதிசயங்கள் நிறைந்த சினிமா அனுபவத்தைத் தரும் ஒரு இரவிற்கான தொனியை அமைத்தது.
நடிகர்கள் கமல்ஹாசன், பிரபாஸ் மற்றும் இயக்குநர் நாக் அஷ்வின், தயாரிப்பாளர் C அஸ்வனி தத், பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா தத் சலசானி ஆகியோர் மேடையில் ஏறியதும், பார்வையாளர்கள் கூட்டம் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது.
இயக்குநர் நாக் அஸ்வினிடம், இதுபோன்ற மிகப்பெரும் நட்சத்திர நடிகர்களை ஒரே படத்தில் இணைத்தது குறித்துக் கேட்டபோது, ”பெரும் ஆளுமைகளின் திரைப்படங்களின் மீதான காதல்தான் எங்களை ஒன்றிணைத்தது. எனக்கு இந்த யோசனை முன்பே இருந்தது, ஆனால் அதற்கேற்ற கதை இப்போதுதான் கிடைத்தது. எனக்கு அறிவியல் புனைகதைகள் மற்றும் புராணங்கள் பிடிக்கும், அவைகளுடன் தான் நான் வளர்ந்தேன். மகாபாரதம் மற்றும் ஸ்டார் வார்ஸ் ஆகிய இரண்டையும் சேர்த்து இந்த இரண்டு உலகங்களையும் இணைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சிறந்ததாக இருக்குமென நினைத்தேன், அப்படித்தான் ‘கல்கி 2989 ஏடி’ பிறந்தது.”
இந்த விழாவினில் லைவ் ஜூம் கால் மூலம் குழு விவாதத்தில் கலந்து கொண்ட அமிதாப்பச்சன் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் தனக்கு மிகவும் பெருமை என்றார். நாக் அஸ்வினின் படைப்புகள் எனக்கு அவர் மீது மிகப்பெரும் ஈர்ப்பை உண்டாக்கியது. இந்தப்படம் குறித்து அவர் தெரிவித்த போது.. ‘புராஜெக்ட் கே’ ஒரு அசாதாரணமான மற்றும் அற்புதமான அனுபவமாக தெரிந்தது, படப்பிடிப்பும் மிக சுவாரஸ்யமிக்கதாக இருந்தது. படக்குழுவுடன் பல அற்புதமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்த ஆண்டு இப்படத்தை பார்க்கும்போது நீங்கள் முற்றிலும் புதிதான அனுபவத்தை உணர்வீர்கள் என்றார்.
மேலும் திரு. பச்சன் காமிக் கான் குறித்து கூறும்போது.. “நாங்கள் காமிக்-கானுக்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று நாகி என்னிடம் கூறியபோது, இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வாய்ப்பின் அருமையைப் பற்றி என் மகன் தான் எனக்கு எடுத்துக் கூறினார்.”
பார்வையாளர்களுடன் உரையாடிய கமல்ஹாசன், “நான் இதுபோன்ற படங்களைச் சிறு முயற்சியாகத் தயாரிக்க முயன்றேன். ‘கல்கி2989ஏடி’ ஒரு பெரிய திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது, இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இம்மாதிரி துருப்புக்களை உருவாக்க நினைத்த போது, ஹாக்கி முகமூடிகளைப் பயன்படுத்தினேன், ஆனால் ‘கல்கி2989AD’ அதை ஸ்டைலாகச் செய்திருக்கிறார்கள், எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளரான C அஸ்வனி தத் தனது மகள்கள் பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா தத் சலசானி ஆகியோருடன் இவ்விழாவில் கலந்து கொண்டார். கருப்பு மற்றும் வெள்ளை திரைப்பட காலத்திலிருந்து அறிவியல் புனைகதைக்கு வந்திருக்கும் கல்கி 2989 திரைப்படம் வரையிலான தனது திரைப்பயணத்தை பகிர்ந்தார். “என்.டி.ராமராவ் உடன் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன், அமித் ஜி, கமல் மற்றும் எனது நண்பர் பிரபாஸ் ஆகியோரை அடைய 50 வருடக் கடின உழைப்பு தேவைப்பட்டது. இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம்.” என்றார்.
சான் டியாகோ காமிக்-கானில் “கல்கி 2989 ஏடி” பங்கேற்றிருப்பது இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்றுத் தருணமாகும், மேலும் இது எதிர்கால இந்திய சினிமாவின் உலக அங்கீகாரத்திற்கு வழி வகுக்கிறது.