படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது திரைக்கதை.
இது பழைய கதைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாத வண்ணம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே.குமார்.
விளம்பர அழகியாக நடித்திருக்கும் நாயகி மீனாட்சி செளத்ரி கொலை செய்யப்படுகிறார். பூட்டிய வீட்டுக்குள் நடந்திருக்கும் அந்தக் கொலையைச் செய்தது யார்? எதற்காக நடந்தது? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதையைக் கொண்டதுதான் கொலை திரைப்படம்.
விசாரணை அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.வழக்கமான விஜய் ஆண்டனியாக இல்லாமல் பாதிநரைத்த முடியுடன் தோற்றத்தில் வேறுபாடு காட்டியிருப்பதோடு கூர்ந்த பார்வை கம்பீர உடல்மொழியுடன் வளையவருகிறார்.
இந்தக் கொலை வழக்கை முதலில் விசாரிக்கும் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரித்திகாசிங்.அதிரடிக்காட்சிகள் இல்லையெனினும் வருகின்ற காட்சிகளில் அழகாகவும் அளவாகவும் இருக்கிறார்.
விளம்பர அழகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரியின் வேடம் நன்று. தன் நடிப்பின் மூலம் அதன் தன்மையை உணரவைத்திருக்கிறார்.
சித்தார்த் சங்கர், முரளிசர்மா, அர்ஜுன் சிதம்பரம், ராதிகா உள்ளிட்ட அனைவரும் அவரவர் வேடத்தைப் புரிந்து நடித்திருக்கிறார்கள்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. வித்தியாசமான கோணங்கள் அமைத்தது மட்டுமின்றி வரைகலைக்காட்சிகளே தெரியாத வண்ணம் உழைத்திருக்கிறார்.
கிரிஷ்கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் வரவேற்புப் பெறுகிறது.பின்னணி இசையிலும் வேறுபாடு காட்ட முயன்றிருக்கிறார்.
விடியும்முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி கே.குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.கொலை செய்யப்படுவரின் துறை சார்ந்த விவரங்களோடு கொலை செய்யப்பட்டவரே அதை வெளிப்படுத்தும் வண்ணம் எழுதியிருப்பது மற்ற படங்களிலிருந்து வேறுபட உதவியிருக்கிறது.
க்ரைம் த்ரில்லர் வகைப் படங்களில் இன்னொரு படமாக இல்லாமல் தனித்தன்மை காட்டியிருக்கிறது இந்தக் கொலை.
– குமரன்