சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42 ஆவது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் சிறுத்தைசிவா ‘கங்குவா’ பற்றிக் கூறியதாவது….
இதை ஒரு பீரியட் படமாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தில் சமகாலம் மற்றும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை என இருவகைகள் வைத்திருக்கிறோம். நான்கு வருடங்களுக்கு முன்பே நான் இந்தக் கதையைத் தயார் செய்து விட்டேன். அப்போதிலிருந்து இக்கதையைப் படமாக்கும் திட்டத்தில் இருக்கும் பொழுது சூர்யா சாருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் பிடித்திருந்ததால் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக பத்து மொழிகளில் தயாராக்கி வருகிறோம்.
கங்குவா என்றால் கங்கு என்பதற்கு நெருப்பு என்று பொருள். எனவே நெருப்பின் மகன் என்ற பொருளில் இப்படத்திற்கு கங்குவா என பெயர் வைத்துள்ளோம். இந்தப் படத்திற்காக சூர்யா மிகக் கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். மிகவும் மெனக்கெட்டு பல விசயங்களைச் செய்திருக்கிறார். படம் பிரம்மாண்டமாகவும், தரமாகவும் தயாராகி வருகிறது. படத்தை டெக்னிக்கலாக தரமாக கொடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சில் தயாராகி வருகிறோம் என்றார்.
‘கங்குவா’ படத்தின் சிலகாட்சிகள், ஜூலை 23 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அந்தக் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், காடு, மலை தாண்டி ஏராளமான வீரர்கள் மடிந்திருக்கும் நிலையில் ஒருவரை அம்பெய்து சூர்யா கொல்லும் காட்சியுடன் தொடங்குகிறது.பிரமிப்பான காட்சிகளுக்குப் பின்னால் தோன்றும் சூர்யாவின் தோற்றம் மாறுபட்டு கவனம் ஈர்க்கிறது. அதில் கடைசியாக, நலமா? என மாறுபட்ட தொனியில் சூர்யா கேட்கிறார்.
அண்மைக்காலமாக, தமிழின் முன்னணி நடிகர் விஜய் படங்களில் பீஸ்ட், லியோ என ஆங்கிலத்தில் பெயர்கள் மற்றும் பாடல்களில் பிறமொழி ஆதிக்கம் என இருக்கிறது.
இதற்கு எதிர்வினையாற்றுவது போல் நல்ல தமிழில் நலமா? என்று சூர்யா கேட்பது வரவேற்பைப் பெற்றுவருகிறது.