திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி, அபிராமி,இயக்குநர் மிஷ்கின், பாவெல் நவகீதன், ரோபோசங்கர், முல்லை அரசி, வினோதினி, நரேன்,அனுபமா குமார், கலைராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
டி ஸ்டுடியோஸ் சார்பில் இராமகிருஷ்ணன் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ்லேப்ஸ் சார்பில் இயக்குநர் விஜய் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கிருஷ்ண சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்ய, தபஸ் நாயக் ஒலி வடிமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
அண்மையில், இப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந் நிலையில், ‘ஆர்யூ ஓகே பேபி?’ படம் பற்றி இயக்குநர் லட்சுமி இராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாவது….
நம்முடைய பயணத்தில் பல விசயங்களைப் பார்க்கிறோம், ஒரு எழுத்தாளராக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவோம்,அதைச் சுற்றி ஒரு கதை உருவாகும். அப்படித் தான் இந்தக் கதை உருவானது.
இந்தப்படம், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நியாயப்படுத்துவது போல இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
டீசரில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி வருவதும், அதில் நானே நடித்திருப்பதாலும், என்னுடைய அனுபவத்தைப் படமாக எடுத்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையோ அல்லது எனது துறையில் நான் எதிர்கொண்ட சிக்கல்கள் பற்றியோ பேசவில்லை.
இது முழுக்க முழுக்க ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றிப் பேசும் படம். தற்போது நாட்டில் நடக்கும் மிக முக்கியமான அந்தச் சிக்கலைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறேன்,முழு கவனமும் அந்த பிரச்சனையை பற்றி மட்டுமே இருக்க வேண்டும், அதே சமயம் இந்த பிரச்சனையை சட்டம், ஊடகங்கள் மற்றும் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படிக் கையாளுகிறது? என்பதையும் சொல்லியிருக்கிறேன். அது என்ன? என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது, முன்னோட்டம் வெளியானால் அதை நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.
தற்போது வெளியாகியிருக்கும் குறுமுன்னோட்டம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.அவற்றிற்கான விடையாக முன்னோட்டம் வெளியாகும்.
இந்தப்படத்தின் கதையை நான் இயக்குநர் விஜய்யிடம் தான் முதலில் சொன்னேன், அவர் உடனே உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்கிறேன் என்று சொன்னதோடு, எங்களுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கவும் செய்தார்.அவர் கொடுத்த ஊக்கத்தால் இந்தப்படம் பெரிய படமானது.
இந்தப்படத்தைத் தொடங்கும் போது முன்னணி நடிகர்கள் யாரும் இல்லை. மிக சாதாரணமான ஒரு படமாகத் தான் தொடங்கினேன். சமுத்திரக்கனி பிசியான நடிகர், அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முயலவில்லை. கதையை அவருக்கு அனுப்பி, அவருடைய கருத்தைக் கேட்கலாம் என்று நினைத்து கதையை அனுப்பினேன்.அவர் அதை ஒரே இரவில் படித்துவிட்டு, மறுநாள் என்னிடம் நான் நடிக்கிறேன் மேடம் என்று சொல்லிவிட்டார். நடிகை அபிராமியும் கதைக்காகத்தான் நடிக்க வந்தார். இயக்குநர் மிஷ்கின் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், அனுபமா குமார், வினோதினி, நரேன்,பாவெல் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் சேர்ந்து விட்டது.
பாவெல் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், முல்லை என்ற பெண்ணும் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணை நான் ஒப்பந்தம் செய்யும் போது, எதற்கு புதுமுகம்? பிரபலமான நடிகையை நடிக்க வைக்கலாமே என்றார்கள். இப்போது இந்த வேடத்துக்கு இவர்தான் மிகப்பொருத்தம் என்கிறார்கள்.
படம் உணர்வுப்பூர்வமாக இருக்கும். எனது படங்கள் விருதுகள் பல வாங்குகிறது, பத்திரிகையாளர்கள் பாராட்டுகிறார்கள்.ஆனால், அவை வியாபார ரீதியாக வெற்றி பெறுகிறதா? என்கிற சந்தேகம் எனக்கே இருந்தது. அந்தக்குறையை இந்தப் படம் சரி செய்யும் என்று நினைக்கிறேன்.
இளையராஜா சார் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவருடைய தீவிர இரசிகை நான். படத்திற்குப் பின்னணி இசை அமைக்கும் போது என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து அவர் பணியாற்றியது மறக்கமுடியாதது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் வேகம் புது அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.