விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்?
இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்?
ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும் கூல்சுரேஷ் வாய்பேசமுடியாதவராக இருந்தால் நன்றாக இருக்குமே
என்பன போன்ற சுவாரசியமான மக்களின் எண்ணவோட்டங்களுக்குக் காட்சி வடிவம் கொடுத்து புது அனுபவம் தரும் பட்மாக வந்திருக்கிறது அடியே.
நாம் விரும்பும் இஷ்ட லோகத்திற்கும், துஷ்ட லோகத்திற்குமான (தற்போதைய நிலைமை) ஒரு முரணியக்கம் தான் படைப்பு என்று ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஹெர்பர்ட் மார்க்யூஸ் சொல்லியிருப்பார்.
மிக ஆழமான இந்தக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் புரியும்படி எளிய வடிவில் இந்தத் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்கார்த்திக்.
பள்ளி மாணவனா? அன்பான காதலனா? அழகிய கணவனா? வாழ்வை வெறுத்த இளைஞனா? இப்படி எதை வேண்டுமானாலும் கொடுங்கள் நான் செய்கிறேன் என்று சொல்லாமல் செய்துகாட்டுகிறார் ஜீ.வி.பிரகாஷ்.இரண்டு உலகங்களிலும் மாறி மாறிப் பயணம் செய்யும்போது நடக்கும் காட்சிகளுக்கு நடிப்பினால் சிறப்புச் சேர்த்து இரசிக்க வைக்கிறார். இதன்மூலம், என்னை எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்று ஓங்கிச் சொல்லியிருக்கிறார்.
96 படத்தில் இளைஞர்களைக் கவர்ந்த கெளரிகிஷன் மீண்டும் அதுபோலவே திரும்ப வந்திருக்கிறார். அவ்வளவு பாந்தமாக வந்து மகிழ்வூட்டுகிறார்.
ஆர்.ஜே.விஜய் சும்மாவே கலகலக்கவைப்பார்.இந்தப்படத்தின் கதைக்களமும் அவருடைய வேடமும் நல்வாய்ப்பாக அமைந்துவிட அடித்து விளையாடியிருக்கிறார்.
வெங்கட்பிரபுவின் வேடமும் அவர் பேசும் விசயங்களும் படத்தை இலகுவாக்கிப் பறக்க வைக்கிறது.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் இருவேறு உலகங்களும் வேறுபட்டு காட்சிக்கு இனிமை சேர்த்திருக்கின்றன.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் சுகமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை.
சிக்கலான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அந்தசிக்கல்களை நிதானமாகப் பிரித்தெடுத்து விளக்கும் திரைக்கதை அமைத்து தமிழில் இப்படி ஒரு படமா? என வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்கார்த்திக்.
– செல்வன்