உலகம் முழுக்கப் புகழ்பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தமிழ்த்திரையுலகுக்குள்ளும் வந்திருக்கிறது. ‘சவாரி’ திரைப்படம் மற்றும் ‘வெள்ள ராஜா’ இணையத் தொடரை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் புதியபடம் வெப்பன்.இந்தப்படத்தில் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தன்யா ஹோப், மாயா, மைம் கோபி, கனிகா, யாஷிகா ஆனந்த், ராஜீவ் பிள்ளை, கஜராஜ், வேலு பிரபாகரன், பரத்வாஜ் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறியதாவது…..

இப்படத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தவில்லை, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, பிளாஷ்பேக் காட்சியை விரைவாக எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான யோசனை வந்தது, சரி பயன்படுத்திப் பார்ப்போம் என்று தான் செய்தோம். சத்யராஜ் சார் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இடம் பெரும் சுமார் இரண்டரை நிமிடக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு முறையை நான் என் படத்தில் பயன்படுத்தியதற்காக, அந்தத் தொழில்நுட்பத்தை வரவேற்கவில்லை, அதுபோன்ற தொழில்நுட்பங்கள் படைப்பாளிகளை நிச்சயம் அழித்து விடும், எனவே அந்த தொழில்நுட்பத்தை நான் எதிர்க்கவே செய்கிறேன்.

வெள்ள ராஜா தொடர் வெளியாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு என் இயக்கத்தில் வெப்பன் படம் வெளியாக இருக்கிறது. இந்த இடைவெளிக்குக் காரணம், வெப்பன் படத்தின் கதைக்களம் தான். சாதாரண ஒரு கதைக்களத்தில் படம் இயக்க வேண்டும் என்றால் எப்போதோ இயக்கியிருப்பேன். ஆனால், அப்படி இல்லாமல் ஒரு புதிய முயற்சியாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். ஹாலிவுட்டில் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்கள் போல் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன், அதற்கான ஒரு கதைக்களத்தை உருவாக்குவதற்குத் தான் எனக்கு இவ்வளவு வருடங்கள் தேவைப்பட்டது.

இந்தப் படத்தில் சத்யராஜ் சார் சூப்பர் ஹுயுமன் வேடத்தில் நடிக்கிறார். அவர் இயற்கையான சூப்பர் ஹுயுமன் கிடையாது, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹுயுமன். அவர் எப்படி உருவானார்? அவரை உருவாக்கியது யார்? என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இப்படி சூப்பர் பவர் கொண்ட கதாபாத்திரங்களை மார்வெல் மற்றும் டிசி அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவை அவர்களுடைய கலாச்சாரத்தின் பின்னணியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நான் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப சூப்பர் ஹூயுமன் கதாபாத்திரத்தை உருவாக்கும் நோக்கத்தில் தான் சத்யராஜ் சார் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறேன்.

அவர் தான் வெப்பன். அதாவது எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத மனித ஆயுதம். அவர் அப்படி மாறியது எப்படி? என்ற ரீதியில் கதை பயணிக்கும்.

இந்தப்படத்தில், வசந்த் ரவி யுடியுப் சேனல் நடத்துபவராக வருகிறார். செயற்கையான சூப்பர் ஹூயுமன்களை தேடும் அவர், சத்யராஜையும் தேடுகிறார், அவரைப் போல் மேலும் சிலர் சத்யராஜை தேடுகிறார்கள், அது ஏன்? என்பது தான் கதை.

சூப்பர் ஹூயுமன் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு படம் எடுக்க மிகப்பெரிய செலவு ஆகும் என்பது தெரியும், ஆனால் அந்த சூப்பர் ஹூயுமன் எப்படி உருவானார் எனச் சொல்வதற்கு பெரிய செலவு ஆகாது. அதைத் தான் இந்தப் படத்தில் நாங்கள் செய்திருக்கிறோம். இதில், சத்யராஜ் சாருக்கு எப்படி சக்தி கிடைத்தது என்பதையும், அவரைத் தேடும் குழுவினர் பற்றியும் சொல்லியிருக்கிறோம். முதல் பாகமான இந்தப் படம் வெளியான பிறகு இதில் இருக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு அடுத்தடுத்து கதைகளைச் சொல்வோம், அவற்றை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.