வயதான ரஜினிகாந்தை வைத்தும் ஒரு ஸ்டைலான ஆக்சன் திரைப்படத்தை தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். டாக்டர் படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனை கொஞ்சம் கூட்டிக் குறைத்து முத்துவேல் பாண்டியன் ரஜினியாக மாற்றியிருக்கிறார். நெல்சனின் யந்திரத்தனமான-காமெடி தன்மை கொண்ட காட்சிகள் ஜெயிலரை ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சமாக மாற்றுகிறது.
ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்கிறார், அவர் தனது பேரனின் யூடியூப் சேனலுக்கான வீடியோக்களை படமாக்குவதில் தனது நேரத்தை செலவிடுகிறார். அவரது மகன் அர்ஜுன் (வசந்த் ரவி) ஒரு மனசாட்சியுள்ள காவலர், சிலை கடத்தல் கும்பலைப் பற்றி ஆழமாக விசாரிக்கக் கிளம்பும்போது, பிரச்சனை முத்துவின் கதவைத் தட்டுகிறது. மாஃபியா கும்பலுடன் அவரது போலீஸ் மகன் செய்யும் மோதலில் மகன் காணாமல் போக, மகனை மீட்கப் புறப்படுகிறார் ரஜினி.
ஜெயிலர் படத்தின் சிறப்பம்சம் சுவாரசியமான திரைக்கதைதான். படம் இடைவேளை வரை டாப் கியரில் தான் போகிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுபட்டாலும் முடிவில் ரசிகர்களை மீண்டும் பிடித்து வைக்கிறது. மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார், ஷெராப் ஆகியோரின் கேமியோக்கள் சிறப்பு.
ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஜோடி வழக்கமான ஜோடி. ரம்யா கிருஷ்ணன் ஸ்கோர் செய்ய இடமில்லை. வில்லன் விநாயகன் அச்சுறுத்தும் எதிரியாக ஒரு அற்புதமான வேலையைச் செய்கிறார். ரஜினி ஜெயிலர் என்பதால் அனைவரையும் ஜெயிலுக்குள் விட்டு அடி வெளுக்கிறார். மனித உரிமையெல்லாம் யாரும் பேசக்கூடாது.
‘ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பு மற்றும் நெல்சனின் தனித்துவமான நகைச்சுவை உணர்வு ஆகியவை படத்தின் மற்ற பகுதிகளை ரசிக்க வைக்கின்றன. ரஜினியின் நடிப்பில் வயதான தளர்வு படம் முழுவதும் ஆங்காங்கே தெரிகிறது. யோகிபாபு நெல்சனின் நகைச்சுவைக்கு தேவையான நல்ல நடிப்பைத் தருகிறார். ‘பிரேக்கிங் பேட்’ என்கிற ஆங்கில க்ரைம் தொடரின் தாக்கம் நெல்சனின் அனைத்து படங்களிலும் தெரிகின்றன.
அனிருத்தின் காதைப் பிளக்கும் இசை இம்சை செய்யவில்லை. வழக்கம் போல மாஸ் ஹீரோக்களுக்கு தரும் இசை. இது போன்ற மசாலாப் படத்திற்கு போதும் தான். ‘காவாலா’, ‘ஹூகும்’ பாடல்களுக்கு தியேட்டர் தெறிக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்டண்ட் சிவாவின் சண்டைக் காட்சிகளும் தங்கள் பணியை கச்சிதமாக செய்திருக்கின்றன.
வயதான அப்பாக்களை மையப்படுத்தி எவ்வளவோ அழகான தமிழ் நாவல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றை எடுத்து ரஜினிக்கு கதையாக உருமாற்றம் செய்திருக்கலாம் தான். ஆனால் அப்படியெல்லாம் எந்த ரிஸ்க்குகளும் இயக்குனர்கள் எடுக்க விரும்புவதில்லை. எனவே ரஜினியின் இந்தப் படமும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிட்டது.
தமிழ்ச் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்று தனியாக உட்கார்ந்து, ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற, அரைத்த மாவுக் கதைகளிலிருந்து, புளித்துப் போன கதைகளை ‘ரெடி’ செய்யும் பழக்கம் ஒழியும் வரை மாஸ் ஹீரோக்களிடமிருந்து தரமான சினிமாக்கள் வருவது கடினம்.
அப்படி ஒரு படமாக இந்த ஜெயிலரும் இருக்கிறார்.
சரி வேறென்ன பண்றது. குடும்பத்தோட போய் பார்த்துட்டு ரசிச்சுட்டு வாங்க. அவ்ளோ தான்.