சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்ததற்காக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஜெயிலர் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் வசந்த் ரவி பேசும்போது, ‘இயக்குனர் நெல்சன் என்னை இந்த படத்திற்காக அழைத்தபோது, இது படத்தின் மிக முக்கியமான மைய கதாபாத்திரம். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக நல்ல பெயர் கொடுக்கும். அதைத் தாண்டி உங்களை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் என்று கூறினார். அதேபோலத்தான் இன்று அவர் சொன்ன வார்த்தை நிறைவேறி உள்ளது. அனிருத் இசையில் ஒரு பாடலிலாவது இடம்பெற்று விட வேண்டும் என எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஆனால் அவரது இசையில் ரஜினி சாருடனேயே இணைந்து ரத்தமாரே பாடலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய முந்தைய படங்களுக்கு உங்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. அதையும் தாண்டி ஜெயிலர் என்னுடைய திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது.

ரஜினி சாருடன் இணைந்து ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என ஒவ்வொரு நடிகருக்கும் கனவு இருக்கும். அது எனக்கு நிறைவேறி உள்ளது. நான் சினிமாவில் நடிக்க விரும்பியபோது முதன் முறையாக சென்று சந்தித்தது ரஜினி சாரைத்தான். அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாது இருவரும் இணைந்து நடிக்கிறோம் என்று.. அதன்பிறகு தரமணி, ராக்கி என எனது படங்களை தொடர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார். ஜெயிலர் படம் முடியும் கடைசி நாளன்று எனக்கு ரொம்பவே எமோஷனலாக இருந்தது. ரஜினி சாரிடம் சென்று இன்று தான் இந்த படத்தில் எனக்கு கடைசி நாள்.. உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.. மீண்டும் உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அவரும் அதையேதான் என்னிடம் கூறினார். இந்த படம் இவ்வளவு மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு நெல்சன் சார் மிக முக்கிய காரணம். அவர் படத்தின் துவக்கத்திலிருந்து இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதற்கான ரிசல்ட் நினைத்ததை விட தாண்டி கிடைத்துள்ளது. எப்போதும் என் வாழ்க்கையில், என் இதயத்தில் அஸ்வின் முத்துவேல் பாண்டியன் என்கிற இந்த கதாபாத்திரம் நிரந்தரமாக இருக்கும்” என்று கூறினார்.

சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா பேசும்போது, “சிறுவயதில் கர்ஜனை படத்தில் முதன்முதலாக ரஜினி சாரை பார்த்தேன். அதன் பிறகு அவருடன் எஜமான், மன்னன், பாண்டியன், முத்து ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 300 படங்களுக்கு மேல்  நான் பணியாற்றி உள்ளேன். இந்த ஜெயிலர் படத்தின் மூலம் தான் முதன்முறையாக ரஜினி சாரின் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளேன். ஒவ்வொரு சண்டைக்காட்சியும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியாக மாஸாக இருக்கும் விதமாக நெல்சனும் நானும் இணைந்து இதை உருவாக்கி உள்ளோம். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் நல்ல பெயர் பெற்றுள்ளது என்றால் அதற்கு காரணம் இயக்குனர் நெல்சன் தான். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்னை விட தீவிர ரஜினி ரசிகர். அதனால் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்கினார்” என்று கூறினார்.

நடிகர் சுனில் பேசும்போது, “வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக தலைவருக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்னை ரொம்பவே அழகாக காட்டியதற்கு அவருக்கும் நன்றி” என்று கூறினார்.

நடிகை மிர்னா பேசும்போது, “என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை அளித்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி. இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் எனக்கு மிகப்பெரிய அன்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு படத்தொகுப்பாளர் நிர்மலிடம் பேசும்போது கூட, இந்த படம் வெளியான பிறகு உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.

ஒரு ஆர்டிஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமே நிறைவேறி விட்டது. அவருடன் 35 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் லாலேட்டனுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. நேற்று இந்த படத்தை கேரளாவில் பார்த்துவிட்டு தான் வருகிறேன். சுனில் சாருக்கு அங்கே அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. அவர் அங்கே சென்றால் தூக்கி கொண்டாடி விடுவார்கள். இந்த படத்தை கேரளாவில் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். என் வாழ்க்கையில் ஜெயிலர் மிக முக்கியமான படம்” என்று கூறினார்.

நடிகர் ஹர்ஷத் பேசும்போது, “இயக்குனர் நெல்சனுடன் 12 வருடமாக பழகி வருகிறேன். இவ்வளவு குறுகிய காலத்திலேயே அவர் இந்த பெரிய இடத்திற்கு வந்து விட்டாரே என பலரும் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் பட்ட கஷ்டங்களை நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். ஜெயிலர் படத்தின் கடைசி ஐந்து நாள் படப்பிடிப்பின்போது கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார் நெல்சன். சினிமாவிற்கு வரும்போது நானும் ரஜினியாக வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் வந்தேன். அவரை நேரில் பார்ப்போமா என்று நினைத்த எனக்கு இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய நடிப்பை பாராட்டி அவர் கை கொடுத்தபோது உறைந்து போய் அந்த உணர்வில் இருந்து வெளிவருவதற்கே எனக்கு ஒரு மாதம் ஆனது” என்று கூறினார்.

பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பேசும்போது, “இந்த பாடல் எழுதிய சமயத்தில் இயக்குனர் நெல்சனுக்கு நான் யார் என்றே தெரியாது. இசையமைப்பாளர் அனிருத் மூலமாக தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கடத்தப்படும் விக்ரஹம் போல தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும். அவரை எந்த இடத்தில் வைத்து கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்களோ அதற்கு ஏற்ற மாதிரி இந்த பாடலை எழுத வேண்டும் என விரும்பினேன். இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்

நடிகர் ஜாபர் சாதிக் கூறும்போது, “இயக்குனர் நெல்சனுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து பணியாற்ற முயற்சித்தபோது சில காரணங்களால் அது தள்ளிப்போய் தற்போது ஜெயிலர் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது. இதுவரை சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் இந்த ஜெயிலர் படத்தில் படம் முழுவதும் வரும் விதமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி” என்று கூறினார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது, “போன முறை ஒரு வருடத்திற்கு முன்பு ஏதோ ஒரு பிரஸ்மீட்டில் இங்கே பேசும்போது நெல்சன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்டார்கள். வெறித்தனமாக கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று கூறினேன். அதற்காக அவரிடம் திட்டும் வாங்கினேன். ஆனால் இப்போது அந்த அளவுக்கு வெறித்தனமாக ஒரு படத்தை கொடுத்து விட்டார். பத்து தீபாவளிகள் ஒரே நாளில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஜெயிலர் பட கொண்டாட்டம்.. எப்படியும் ஆயிரம் கோடியை இந்த படம் தொடும்” என்று கூறினார்.

இயக்குனர் நெல்சன் பேசும்போது, “இந்த வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர், ஆரா மற்றும் அவரது ரசிகர்கள் தான். ஒளிப்பதிவாளர். விஜய் கார்த்திக் கண்ணன் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார் இதற்காக ஏதோ சித்த வைத்தியம் பார்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரும் ரஜினி சாரின் ரசிகன் தான் என்றாலும் சில விஷயங்களை நம்புகிற மாதிரி இல்லை என்றால் அதை ஓபன் ஆக சொல்லிவிடுவார். இந்த படத்தில் அதிக நேரம் பணியாற்றியது என்றால் அது படத்தொகுப்பாளர் நிர்மலாகத்தான் இருக்கும். படம் ரிலீஸ் ஆகின்ற தினத்தில் கூட ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதேபோல கலை இயக்குனர் கிரண் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என கேட்டார். ஆனால் அவரின் முழு கவனத்தையும் செட்டின் மீது செலுத்துங்கள் என கூறிவிட்டேன். கோபத்தில் ஏதாவது குறை வைத்து விடுவாரோ என நினைத்தேன் ஆனால் அற்புதமாக தனது வேலையை பார்த்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்திலிருந்து ஸ்டன் சிவா மாஸ்டர் என்னை பாலோ செய்து வருகிறார். அதன்பிறகு தான் அவர் பணியாற்றிய படங்களை பார்த்தேன். உடனே ஜெயிலர் படத்தில் அவரை பணியாற்ற இணைத்துக்கொண்டேன். படப்பிடிப்பிற்கு அவர் மட்டுமல்ல அவரது இரண்டு பையன்களும் இணைந்து வந்து பணியாற்றினார்கள்.

ஜானி மாஸ்டருடன் நான்காவது முறையாக இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளேன். அவர் வடிவமைத்த காவாலா பாடல் படத்திற்கு மிகப்பெரிய புரமோஷன் ஆக அமைந்தது. நடிகர் சுனில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒப்புக்கொண்டு நடித்ததுடன் சிறப்பாக நடித்தாலும் கூட இன்னொரு முறை டேக் போலாகலாமா என ஆர்வமுடன் கேட்பார். எனக்காக ஒரு டேக்கும் அவருக்காக ஒரு டேக்கும் கூட சில நேரங்களில் எடுத்துக் கொண்டு அவற்றில் எது சிறப்பாக இருந்ததோ அதை பயன்படுத்தினோம்.

இந்த படத்தில் மிர்னா நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக முதலில் ஐந்து ஆறு பேரிடம் பேசினோம். ஆனால் மிர்னாவின் நடிப்பை பார்த்ததும் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய யோசிக்கவில்லை. இந்தப்படத்தில் குறைந்த டேக் வாங்கி நடித்தவர்களில் மிர்னாவும் ஒருவர்.  இந்த படத்திற்காக ஹுக்கூம் பாடல் எழுதப்பட்டு என்னிடம் வந்த போது இதை எழுதியவர் யாரோ ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தானே என்று அனிருத்திடம் கேட்டேன். அந்த அளவிற்கு ஒரு அதிரடி பாடலாக இதை உருவாக்கி இருந்தார்.

என்னுடைய முதல் படத்திலிருந்து இடம் பிடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அவர் வரவில்லை என்று கூறினாலும் ஓல்டு சென்டிமென்ட் பேசி பிளாக்மெயில் செய்து வர வைப்பேன். ஆனால் படத்திற்குள் வந்த பிறகு நம்மை அவர் பிளாக்மெயில் செய்வார். கதை விவாதங்களில் கூட வந்து கலந்து கொள்வார். ஆனால் தேவையில்லாமல் ஏதாவது சொல்லி கோபித்துக் கொண்டு செல்வார்.

சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி மாறன்.

இந்த படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் ரஜினி சார் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார். படம் பார்த்துவிட்டு, நான் நினைத்ததை விட பத்து மடங்கு நல்லா வந்திருக்கு என்று பாராட்டினார். நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தபோது ரஜினி சார் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது இமயமலையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “இந்த படத்தில் ரஜினி சாரின் கண்களை அதிகளவு குளோசப் காட்சிகளில் பயன்படுத்தி இருந்தோம். அதற்கு காரணம் எப்போதுமே அவர் நம்மை நோக்கி பார்க்கும்போது அவரது கண்களின் பார்வை தீர்க்கமாக இருக்கும். நான் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும் இதை என்னிடம் கூறி ரஜினி சாரின் கண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைக்க விரும்பினார். படத்தில் அந்த காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும்போது மாஸாக இருந்தது” என்று கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.