ஒரு மருத்துவமனை, அங்கே மூன்று வெவ்வேறு பருவ இணையர்கள். அவர்களின் நெகிழ்வான கதைகள். இவைதாம் வான் மூன்று.
ஆதித்யாபாஸ்கர் – அம்மு அபிராமி ஓர் இணை. இவர்களுக்குக் காதல்தான் சிக்கல், வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் ஒன்னொரு இணை. இவர்கள் திருமணமானவர்கள். பத்துமாதங்களிலேயே மனைவியைப் பிரிய வேண்டிய சூழல் இவர்களுடைய சிக்கல். மூன்றாவதாக டெல்லிகணேஷ் – லீலா சாம்சன் இணையர். வயதான இவர்களில் ஒருவர் மரணிப்பார் எனும் கொடிய சூழல். அந்நிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு.
இவற்றைச் சரியாகக் கோர்த்திருக்கும் திரைக்கதை.
காதல் தோல்வி தற்கொலை முயற்சி எனப்போகும் ஆதித்யாபாஸ்கர் அம்முஅபிராமி கதையில் இருவரும் பொருத்தமாக இருக்கிறார்கள். அம்முஅபிராமி போல் ஆறுதல் சொல்லி அரவணைக்கும் பெண் இருந்தால் அனைத்து இளைஞர்களுக்கும் சுகமே.
உயிருக்குப் போராடும் காதல் மனைவி என்றால் அக்கணவனின் உள்ளம் எவ்வளவு பாடுபடும்? என்பதை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் வினோத்கிஷன்.அபிராமி வெங்கடாசலமும் தன் நடிப்பின் மூலம் நம்மைத் தவிக்க வைக்கிறார்.
வயதானாலும் அன்பு குறையாத தம்பதியாக டெல்லி கணேஷும் லீலா சாம்சனும். மனைவியைக் காப்பாற்ற இயலாதே என்று டெல்லிகணேஷ், எனக்குப் பிறகு இவர் என்ன ஆவார்? என எண்ணும் லீலாசாம்சன். காண்போரைக் கலங்க வைத்துவிடுகிறார்கள்.
உணர்வுப்பூர்வமான இந்தக் கதைக்கு இசை மிக முக்கியம் என்பதை உணர்ந்து பின்னணி இசை சேர்த்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் ஆர் 2 பிரதர்ஸ்.
ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நடக்கும் கதை என்றாலும் கதையில் இருக்கும் காதலைக் காட்சிகளில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.எம்.முருகேஷ். காதல் எப்போதும் காதல்தான் என்பதை எளிமையாகவும் வலிமையாகவும் சொல்லி எல்லாத் தரப்பினரையும் எல்லா வயதினரையும் ஈர்க்கிறார்.
– குமார்
இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும்.