நாக சைதன்யா ஸ்ரீகாகுளத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று, தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அணுகுமுறையை அவர் தொடங்கி இருக்கிறார். அங்குள்ள மீனவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை.. ஆகியவை பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இதன் மூலம் நாக சைதன்யா தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்.
‘கார்த்திகேயா 2’ படத்தினை பான் இந்திய அளவில் இயக்கிய இயக்குநர் சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘NC 23’. இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தினை தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கீதா ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்குகிறார்.
‘ NC 23’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தின் நாயகனான நாக சைதன்யா, இயக்குநர் சந்து மொண்டேட்டி மற்றும் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆகியோர் விசாகப்பட்டினத்திற்கு வருகை தந்தனர். அங்கிருந்து அவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாயகன் நாக சைதன்யா, ” இயக்குநர் சந்து மொண்டேட்டி ஆறு மாதங்களுக்கு முன் கதையையும், கதை களத்தையும் விவரித்தார். அதில் நான் மிகவும் உற்சாகமானேன். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதையை உருவாக்கி இருந்தார். தயாரிப்பாளர் வாஸ் மற்றும் சந்து இரண்டு வருடங்களாக இப்படத்தின் திரை கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கதை மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உடல் மொழி, மீனவ கிராமங்களின் அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளவே இங்கு வருகை தந்திருக்கிறோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கின்றன” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி பேசுகையில், ” கார்த்திக் என்ற உள்ளூர் இளைஞர் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு கதையை தயார் செய்தார். முதலில் அரவிந்த்திடமும், பின் தயாரிப்பாளர் பன்னி வாஸிடமும் இக்கதையை சொன்னார். கதையை கேட்டதும் உற்சாகமடைந்தோம். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் திரைக்கதைக்காக உழைத்து வருகிறோம். தற்போது திரைக்கதை முழு வடிவம் பெற்று தயாராகி இருக்கிறது. மேலும் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் முழு கதையையும் கேட்ட நாக சைதன்யா மகிழ்ச்சியடைந்தார். சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டோம்” என்றார்.
தயாரிப்பாளர் பன்னி வாஸ் பேசுகையில், ” எங்களது பணிகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. 2018 ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் நடந்தது. இக்கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் பணி நிமித்தம் குஜராத் செல்கிறார்கள். அங்கு அவர்கள் மீன்பிடி படகுகளில் வேலை செய்கிறார்கள். எழுத்தாளர் கார்த்திக் 2018 இல் நடந்த சம்பவத்தை ஒரு கதையாக உருவாக்கினார். இயக்குநர் சந்து அதை விரும்பி அழகான காதல் கதையாக மாற்றினார். அண்மைக்காலமாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சில யதார்த்தமான திரைப்படங்களை உருவாக்க முனைகின்றனர். இயக்குநர் சந்துவும் கதையின் வேர்பகுதிகளுக்கு செல்ல விரும்பினார். இங்குள்ள வளி மண்டலத்தையும், மீனவர்களின் உடல் மொழியையும் காண வந்தோம். நாக சைதன்யாவும் மீனவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்.
இங்கு நடைபெற்ற சம்பவம் டெல்லியை உலுக்கியதுடன் பாகிஸ்தானில் உள்ள கராச்சியையும் அதிர்ச்சி அடைய செய்தது. எனவே நாங்கள் கிராமத்திற்கு செல்ல விரும்பினோம். இங்கு எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும் சில விவரங்களை அறிந்து கொள்ள மீண்டும் இங்கு வருவோம். கிராம மக்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.