ஆறு மாதங்களில் 12 இளம் பெண்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புக்களை கொடூரமாக வெட்டி கொலை செய்கிறார் வில்லன் ராகுல் போஸ். அவர்தான் குற்றவாளி என கண்டுபிடித்து அவரை நெருங்குகிறார்கள் தனிப்படை போலீஸ் அதிகாரிகளான ஜெயம் ரவி, நரேன். அப்போது நடக்கும் மோதலில் நரேன் கொல்லப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட ராகுல் பின்னர் தப்பித்தும் விடுகிறார். நண்பன் இழப்பைத் தாளாமல் போலீஸ் வேலையைத் தொடர மாட்டேன் என ராஜினாமா செய்கிறார் ஜெயம் ரவி. இருந்தாலும் தொடர்ந்து இளம் பெண்களின் கடத்தல் நடக்கிறது. தனக்கு நெருக்கமானவரின் பெண்ணும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட மீண்டும் களத்தில் இறங்குகிறார் ஜெயம் ரவி. கொலைகாரனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கடும்போக்குக் கொண்ட காவலதிகாரி வேடமேற்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே மிடுக்குடன் நயன்தாராவையும் அணுகுகிறார்.குற்றவுணர்ச்சியில் நண்பரை எண்ணிக் கலங்கும்போது வேறு முகம் காட்டுகிறார்.ஒன்றுக்கு இரண்டு கனமான வில்லன்களைத் தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக இதற்கு முன்பே பல படங்களில் செய்ததைத் தாண்டி புதிதாக நடிக்க இப்படத்தில் வாய்ப்பு இல்லை.
ஜெயம்ரவியைத் தேடித்தேடிக் காதலிக்கும் வேடம் நயன்தாராவுக்கு. அதை அவர் நன்றாகச் செய்திருக்கிறார். அவரை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்.
யுவனுடைய இசை பரவாயில்லை. மிகக் கோரமான படத்திற்கு உயிர் கொடுக்க முயற்சி செய்கிறது. எந்தப் பாடலும் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் சில வித்தியாசமான குரல்களை வைத்து புதுமைகளை முயற்சி செய்துள்ளார். ஆனால், காட்சிகளில் வலுவில்லாததால் அந்த உழைப்பு வீணாகிறது.
ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த் தொடர் கொலையைப் பிரதிபலிக்கும் இருண்மையைத் தனது ஒளிப்பதிவில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தின் நீளத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். மனித உடல்களை அறுக்கும் இடம், இறந்த உடல்களைக் காட்சிப்படுத்துவது, போஸ்ட்மார்ட்டம் எனக் கலை இயக்குநர் ஜாக்கி அவர் மேல் குறை சொல்ல முடியாத உழைப்பைத் தந்திருக்கிறார். ஆனால் சைக்கோ கில்லர் என்றால் வித்தியாசமாக கொல்லுவது அவனைப் பிடிப்பது மட்டும் தான் கதையா.
படத்தில் உயிர்ப்பான கதை எங்கே என்று கேட்டால், கதையை படத்தினுள் தேடித்தான் பார்க்க வேண்டும். படத்திற்கு இறைவன் என்று ஏன் பெயர் வைத்தார்கள். பிரம்மா என்பது கில்லரினஅ பெயராக இருப்பதால் படைப்பவன் அழிப்பவன் இருவரும் இறைவனே என்று யோசித்திருக்கலாம். அப்படியே மக்களின் மனதைத் தொடும் கதை ஒன்றையும் சேர்த்து யோசித்திருக்கலாம்.