இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் கடந்த 8 ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படத்தில் தந்தை – மகன் என கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சில சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ள சமூக அவலங்களை காட்டின. அதாவது வங்கி கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தல்(பாஜக ஆட்சியில் 9 லட்சம் விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளதாக ஒரு தனியார் கணக்கீடு தெரிவிக்கிறது), அரசு மருத்துவனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழப்பு, ஆயுத கொள்முதல் ஊழல், மக்களுக்கு பிரச்சனைகள் தரும் தொழிற்சாலைகளை பெரிய நிறுவனங்களுக்குடன் அரசியல் தலைவர்கள் ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே தற்போதைய பாஜக அரசின் ஆட்சியில் நடந்து வரும் ஊழல்கள். கார்கில் போரில் மாண்ட நம்ம ராணுவ வீரர்களை அடக்கம் செய்த சவப்பெட்டியில் கூட ஊழல் செய்ததை நினைவு படுத்துகிறது, இந்திய ராணுவத்திற்கு விஜய் சேதுபதி கம்பெனி சப்ளை செய்யும் துப்பாக்கிகள் மட்டரகம் எனும் காட்சி. க்ளைமாக்ஸில் EVM ஓட்டு இயந்திரங்கள் மொத்தத்தையும் கடத்தி வந்து ஷாருக்கான் டீல் பேசுவது கூட ஓட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கேலிக்குறியாக்கியிருக்கிறது. இந்தப் படத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்த்த சூழலில் திடீரென ‛ஜவான்’ திரைப்படத்துக்கு பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா சார்பில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜவான் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரச்சனைகள் என்பது 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை நினைவுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் ஒரு நீண்ட பதிவில் கூறியுள்ளதாவது:

‛ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரை ஊழல், கொள்கைகளை முடக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. இந்த 10 ஆண்டின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடந்த கால சோகமான அரசியலை இது நினைவுப்படுத்துகிறது. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என ஊழல் மலிந்து முந்தைய காங்கிரஸ் அரசு இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற அரசாக, தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும் அரசாக 9 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, நேர்மையான ஆட்சியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி எடுத்துள்ளது. காங்கிரஸ் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தி உள்ளது. அதோடு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2.55 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கடன் செலுத்தாத நண்பர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. தப்பியோடிய விஜய் மல்லையா, முந்தைய கடனை கூட திருப்பி செலுத்தாமல் மேலும் கடனை நீட்டித்ததற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.’ என்று நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு புல்லட் புரூப் ட்ரெஸ் வாங்கிக் கொடுத்தோம் என்றெல்லாம் அவர் அளந்தாலும், அக்னிபாத் என்று ராணுவ வீரர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக மாற்றிவிட்டு, 23 வயதிலேயே ரிட்டையர்மென்டாக்கி விடுவதையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நம்புகிறது மோடி அரசு.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதை தான் நமக்கு நியாபகத்துக்கு வருகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds