மணிச்சித்திர தாள் என்கிற மலையாளப்படத்தைல 2005ல், தமிழில் சந்திரமுகியாக பி.வாசு இயக்கினார். ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டாக ஆனது இந்தத் திரைப்படம். ஜோதிகாவின் நடிப்பு புகழ்பெற்றது. பொதுவாக புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாதபடி படத்தின் பாத்திரங்களிலிருந்து, படத்தின் அரண்மனை லொக்கேஷன் வரை அனைத்தையும் அப்படியே திரும்ப கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார் பி.வாசு. இது மட்டுமே போதுமா.. முக்கியமான ஒன்று வேண்டாமா..
இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார். பல இடங்களில் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.சாதாரண நாயகர்கள் போல் அல்லாமல் சூப்பர்ஹீரோக்கள் போல அவருடைய அறிமுகக் காட்சிகளை அசத்தலாகக் கொடுக்க நினைத்திருக்கிறார்கள்.அவரும் அதற்கேற்ப உழைத்திருக்கிறார்.
படத்திலோ, கதையிலோ ஏதும் புதிதாய் இல்லை. ராகவா லாரன்ஸ் ரஜினியை அப்படியே காப்பியடித்திருக்கிறார் என்றால் இசையமைப்பாளர் கீரவாணி அதே போல முதல் படத்தைப் போலவே அதே சூழல்களில் பாட்டுக்களை போட்டிருக்கிறார். எல்லாமே சுமார் ரகம்தான்.
சந்திரமுகியாக ஜோதிகாவைப் பார்த்தோருக்கு கங்கனா ஏமாற்றம் தருகிறார். முதல்தலைமுறை இரசிகர்களுக்கு இவர்தான் சந்திரமுகி.
இலட்சுமிமேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே,சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகிய நாயகிகளில் இலட்சுமிமேனனுக்குக் கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ராதிகா, சுரேஷ்மேனன், ராவ்ரமேஷ் உள்ளிட்டோர் படத்தில் நிறைந்திருக்கிறார்கள்.
முதல்பாகத்தில் அந்த அரண்மனைக்குள் போகவே பயப்படும் வடிவேலு, இந்தப் பாகத்தில் அந்த அரண்மனைக்கே சொந்தக்காரராக வருகிறார். சந்திரமுகியை பின்பற்றி அதே போன்று காமெடி செய்ய முயலும்போது அது தோல்வியில் முடிந்துவிட்டது. புதிதாகவே ஏதாவது யோசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறார்.ஏராளமான நடிகர்கள் இருந்தும் அவரவர்க்குரிய திரைவெளியைக் கொடுத்திருக்கிறார்.
எம்.எம்.கீரவாணி இசையில் ஸ்வாகாதஞ்சலி, ரா ரா ஆகிய பாடல்கள் பரவாயில்லை. மற்ற பாடல்களும் முதல்பாகத்தின் பாடல்களை நினைவுபடுத்துகின்றன.பின்னணி இசையில் படத்தை மிரட்டி விடமுடியவில்லை.
படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தைத் தொகுக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.தோட்டாதரணியில் கலை இயக்கம் நன்று.
இரண்டாம்பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்கியிருப்பதால், கதை, திரைக்கதை மற்றும் நடிகர்கள் ஆகிய அனைத்திலும் முதல்பாகத்தின் தொடர்ச்சியாகத் தெரியவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். முதல்பாகத்தில் மனிதர்களாக இருந்தவர்களை இந்த பாகத்தில் ஆவிகளாக மாற்றி இற்றைப்படுத்தியிருக்கிறார். ஆனால் என்ன செய்வது கதை என்பது வலுவாக இல்லாததால் படம் வழக்கமான ஒரு ராகவா லாரன்ஸின் பாட்டு, டான்ஸ், ஆவிக் காமெடிகள் என்றே படம் போகிறது.
குழந்தைகளோடு போய்ப் பார்த்தால் குழந்தைகள் ஆவி, பேய்களை கொஞ்சம் ரசிப்பார்கள். மற்றபடி முதல்பாகத்தை நினைத்து ஒப்பிட்டபடி தியேட்டர் பக்கம் போய்விடாதீர்கள்.