சித்தார்த் சித்தப்பாவாக நடிக்கும் ஒரு பாசப் போராட்டக் கதைதான் சித்தப்பா என்கிற இந்த சித்தா. அப்பா மகள் பாசக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் அப்பாவுக்குப் பதிலாக சித்தப்பா. நாயகன் சித்தார்த் என்பதால் சித்தா என்று பெயர். ஒரேகல்லில் இரண்டுமாங்காய்கள்.
உயர்தர வகுப்பினர் வேடத்துக்கு ஏற்ற சித்தார்த், இந்தப்படத்தில் நடுத்தரக்குடும்ப இளைஞர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.உயிருக்குயிராக வளர்த்த மகள் காணவில்லை என்று கலங்கித்துடிக்கும் நேரத்திலும் அவர்மீதே ஒரு பழி வருகிறது எனும்போது பதறும் நேரத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயனும் அவ்வளவு இயல்பு. ஆழமான விசயங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்.
மகளாக நடித்திருக்கும் சகஸ்ராஸ்ரீ சிறப்பு. ஆபத்தில் சிக்கியிருக்கும் நேரத்தில் ஆண்டவனிடம் இறைஞ்சும் காட்சியில் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடுவதைத் தவிர்க்கவியலாது.
சித்தார்த்தின் அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலிநாயர், தேர்ந்த நடிப்பால் ஈர்க்கிறார்.
இவர்கள் தவிர நடித்திருப்போர் பெரும்பாலும் புதுமுகங்கள்.காண்போருக்கு அது தெரியாதபடி நடித்திருக்கிறார்கள்.
பழனி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை அழகாகக் காட்சிப்படுத்தி கதாபாத்திரங்களுக்கேற்ற ஒளியமைப்பில் மற்ற காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜிசுப்பிரமணியம்.
திபுநினந்தாமஸ் இசையில் பாடல்கள் நன்று.விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பலமூட்டியிருக்கிறது.
சுரேஷ் ஏ.பிரசாத் படத்தொகுப்பில் படம் நிறைவாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.யு.அருண்குமார், தெரிந்த கதையையே புதிதாகக் காட்டியிருக்கிறார். உணர்வுகள் ஒருபோதும் மங்காதவை அதிலும் பாச உணர்வுகளின் ஆழம் அதிகம். அதைச் சிந்தாமல் சிதறாமல் திரைக்கதையில் வெளிப்படுத்தி அனைவரும் இரசிக்கும் படத்தைக் கொடுத்துள்ளார்.
– குமரன்