ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, அமித் பார்கவ் நடிப்பில் வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் ரங்கோலி.
சலவைத் தொழிலாளி ஒருவர் கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும், அடிதடியில் ஈடுபட்டு படிப்பை கெடுத்துக் கொள்ளும் தன் மகன் சத்யாவை (ஹம்ரேஷ்), சி பி எஸ் இ பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். தனியார் பள்ளியில் அதிக பீஸ் மற்றும் செலவு காரணமாக அவர், மனைவி, அவரோடு சலவைப் பணி செய்யும்- படிக்காத மகள்?? ( அக்ஷயா) ஆகியோர் கஷ்டப்ட்டு உழைத்து அவனை படிக்கவைக்கின்றனர்.
புதிதாக சேர்ந்த பள்ளியிலும் மாணவர்கள் சிலர் சத்யாவிடம் வம்பு செய்ய அவர்களுடன் சத்யா சண்டைக்கு செல்கிறான். தங்கள் வகுப்பில் படிக்கும் பார்வதி ( பிரார்த்தனா) யாருடன் பேசி பழகுகிறார் என்பதில் சத்யாவுக்கும் சக மாணவர்களுக்கும் போட்டி நடக்கிறது. ஒரு கட்டத்தில் பார்வதியை சத்யா காதலிப்பதாக ரெஸ்ட் ரூம் சுவற்றில் எழுதி இருப்பது புகார் ஆகி சத்யாவை பள்ளியை விட்டு அனுப்ப பிரின்ஸ் பால் முடிவு செய்கிறார் . அவரது காலில் விழுந்து சத்யா மன்னிப்பு கேட்பதால் மன்னிக்கிறார். மீண்டும் சத்யா சக மாணவனை அடிக்கிறார். தனியார் பள்ளியில் சேர்ந்ததால் அவர் படிப்பு என்னவானது என்பதை கேள்வியோடு முடிக்கிறது படம்.
பள்ளி மாணவர்கள் பற்றிய கதைகள் காதல் கதைகளாகத் தான் பெரும்பாலும் மாறியிருக்கின்றன. ரங்கோலி படம் சற்று மாறுபட்டு சிந்திக்கப்பட்டிருக்கிறது. 15 வயது என்பது மனதை அலைபாயவிடும் காலகட்டம் என்பதால் காதல் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதையே பிரதானமாக எடுக்காதது ஆறுதல் . புதுமுக ஹீரோ சத்யா கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் ஹம்ரேஷ் துடிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து மனதில் இடம்.பிடிக்கிறார். பார்க்க ஜி வி பிரகாஷை போலவே தெரிகிறார்
தன்னை வேறு பள்ளியில் சேர்க் கப்போவதாக தந்தை முருகதாஸ் கூறியதும் அதற்கு மறுத்து அடம் பிடிக்கும் ஹம்ரேஷ் வேறு வழியில்லாமல் அந்த பள்ளியில் போய்ச் சேர்வதும், நடத்தும் பாடம் புரியாமல் தேர்தலில் குறைந்த மார்க் வாங்குவது, சக மாணவர் களுடன் மோதல் சர்ச்சை என்று நடப்பதால் பழைய பள்ளியின் இனிமையான வாழக்கை சிதைந்து ஹம்ரேஷுக்கு படிப்பதே சுமையாகிப் போவது இதுபோன்ற சூழலில் சிக்கும் எல்லா மாணவர் களுக்கும் உள்ள கஷ்டம்தான்.
பிள்ளைக்கு சூடு போடுவது, டிசி கொடுப்பதாக மிரட்டுவது போன்றவை மறுமுறை திரைக்கதையில் வரும்போது அவற்றை அமைத்து இருக்கும் விதமும் அருமை. ஈவு இரக்கமுள்ள – வட்டிக்கு விடும் நபர் , நவநாகரீக இளைஞராக தமிழ் வாத்தியார் போன்றவை, அடடே வித்தியாசம் . தமிழ் ஆசிரியருக்கு ராவணன் என்ற பெயர் … அருமை. அருமை.
ஆனந்த் மணியின் கலை இயக்கம், சுந்தர மூர்த்தியின் இசை இவையும் படத்துக்கு பக்க பலம் அல்லது பக்கா பலம்.
கதையிலும் தனியார் பள்ளியா, அரசுப் பள்ளியா என்பதை மட்டும் பிரதான விஷயமாகக் கொண்டு, திரைக்கதையிலும் பலமில்லாமல், பாத்திரப் படைப்புகள் நன்கு இருந்தும், கதை எங்கெங்கோ பயணித்து எங்கோ போய் முடிகிறது.
புதுமுகங்களாக சேர்ந்து செய்திருக்கும் முயற்சி. குறைகள் இருந்தாலும் ரங்கோலி கலர்புல் தான்.