சி.எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரத்தம்’, அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. . இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.
சி எஸ் அமுதன் இப்படம் குறித்து பேசுகையில், “நானும் விஜய் ஆண்டனியும் எப்பொழுதோ கூட்டணி சேர்ந்து இருக்க வேண்டியது. ஆனால் அது இவ்வளவு தாமதத்திற்கு பிறகு தற்போது அரங்கேறி இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தோம். அப்போதிலிருந்து நண்பர்களாக பழகி வருகிறோம். நான் முதல் படம் தமிழ் படம் முடித்த கையோடு விஜய் ஆண்டனியோடு கூட்டணி சேர வேண்டி இருந்தது. சில காரணங்களால் அது தள்ளி போடப்பட்டு தற்போது ரத்தம் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்த படம் ஒரு குறிப்பிட்ட ஜானலில் அடக்கி விட முடியாது. இதுவரை நீங்கள் பார்த்த த்ரில்லர் படங்களை விட இது பல விதங்களில் மாறுபட்டு இருக்கும்.
மர்டர் மிஸ்டரி படம் என்றாலே கொலையாளி யார் என்று கடைசி வரை சஸ்பென்சை வைத்திருப்பது தான் வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் நாங்கள் கொலையாளி யார் என்பதை முன்பே காட்டி விடுகிறோம். அப்படி இருந்தும் சுவாரசியம் குறையாமல் திரைக்கதை அமைத்து, எப்படி யாரால் எங்கு கொலை நடக்கிறது என்பதை வித்தியாசமாகக் கூறியிருக்கிறோம். ரசிகர்களுக்கு படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மீடியா சம்பந்தப்பட்ட ஒரு கதையாக இதை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதேபோல் படத்தில் தற்கால பிரச்சனைகள் சில குறித்தும் பேசியிருக்கிறோம்.
என் முதல் படத்திற்கு தமிழ் படம் என்றும் இரண்டாம் படத்திற்கு ரெண்டாவது படம் என்றும் வித்தியாசமாக பெயர் சூட்டினேன். அதேபோல் விஜய் ஆண்டனியும் வித்தியாசமாக பிச்சைக்காரன் கொலைகாரன் சைத்தான் போன்று டைட்டில் வைப்பார். அதேபோல் இந்த படத்திற்கு ரத்தம் என நாங்கள் பெயர் சூட்டி இருக்கிறோம். நெகட்டிவ் டைட்டில் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கொடுத்துள்ளது. அதையே இந்த படத்திற்கும் நாங்கள் பின்பற்றி இருக்கிறோம்.
இந்தப் படத்தில் நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். இதுவரை ஸ்பூப்(spoof) படங்களை செய்த நான் இப்போது திரில்லர் படம் எடுத்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்” என்றார்.