ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது என்றார்கள். எடுத்தவரை போட்டுப்பார்த்தால் வெட்டி வீசியது போக சுமார் ஏழுமணி நேரப் படம் இருந்ததாம். அதனால் அதை இரண்டு படங்களாக மாற்றிவிடலாம் என்று ஷங்கர் சொன்னார். அதை முதலில் லைகா நிறுவனம் ஏற்கவில்லை.
இயக்குநரும் நாயகனும் முடிவு செய்துவிட்டால் அதை மீறி தயாரிப்பு நிறுவனம் ஏதும் செய்யமுடியாது என்பதை நிருபிக்கும் விதமாக இவ்விசயத்திலும் ஷங்கர் சொன்னதே நடந்திருக்கிறது.
இரண்டு படங்களாக வெளியிடும் முடிவை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் ஷங்கர் மற்றும் கமலுக்கு இரண்டு படங்களுக்கான சம்பளத்தையும் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறது.
எனவே, இதுவரை எடுத்ததே போதுமென்றாலும் வாங்கிய சம்பளத்துக்காக இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.
அது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது, இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளையும் முடிவு செய்துவிடுவோம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.
வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டால் நெருக்கடிக்கு ஆளாகிவிடுவோம் என்று நினைப்பதால் எப்போதும் அதற்கு ஒப்புக்கொள்ளாத ஷங்கர், இப்போது ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.
அதன்படி, இந்தியன் 2 படத்தை ஏற்கெனவே அறிவித்தபடி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுவிடலாம் என்றும் அதற்கு அடுத்த இந்தியன் 3 படத்தை 2025 பொங்கல் நாளில் வெளியிட்டுவிடலாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
கமல், ஷங்கர், ரெட்ஜெயண்ட், லைகா ஆகிய நான்கு தரப்பினரும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதால் இந்தத் தேதிகளில் மாற்றம் ஏதுமில்லாது வெளியாகிவிடும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.