விக்ரம்பிரபு – ஷ்ரதாஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதியரை வைத்துக் கொண்டு திருமண பந்தம் என்பது வெட்டிவிடுவதன்று இறுகப்பற்றிக் கொள்வது என்பதைப் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.
மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய நினைக்கிறார்.அதனால் அதிர்ச்சியடையும் அபர்ணதி உளவியல் நிபுணரான ஷ்ரதாஸ்ரீநாத்தை அணுகுகிறார். இன்னொரு பக்கம் மனைவி சானியா தன்னை விட்டு விலகி இருக்கிறார் என்பதற்காக ஸ்ரீ, ஷ்ரதாஸ்ரீநாத்தை நாடுகிறார்.
இவ்விரு இணையருக்கும் உளவியல் ஆலோசனை சொல்லும் ஷ்ரதாஸ்ரீநாத்துக்கும் அவருடைய கணவர் விக்ரம்பிரபுவுக்கும் கருத்துவேறுபாடு.
இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மனநிலை என்ன? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.
விக்ரம்பிரபு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். மனைவி குறித்து எண்ணிக் கலங்குமிடங்களில் நல்ல நடிப்பெனப் பெயர்பெறுகிறார்.
ஷ்ரதாஸ்ரீநாத் அவருக்குப் பொருத்தமான இணையராக இருக்கிறார். பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்குப் பைத்தியம் பிடித்தால் எனும் சொலவடைக்கேற்ற கதாபாத்திரம். அதில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
மனைவியை விவாகரத்து செய்ய நினைக்கும் முடிவுக்கு ஒரு கணவர் ஏன் வருகிறார்? என்கிற காரணத்தை வெளிப்படுத்திக் குமுறும் நேரத்தில் நடிப்பின் மூலம் அதற்கு முழுநியாயம் செய்திருக்கிறார் விதார்த்.
அபர்ணதி பெரும்பான்மை மனைவிகளைப் பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். அதைச் சரியாகச் செய்ய கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்.
மூன்றாவது இணையரான ஸ்ரீ சானியா இணையர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் அதன் எதிர்வினைகளும் நவநாகரிகமானவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கானவை. அவர்களும் இயல்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மறைந்த மனோபாலா அடக்கமுடியாமல் சிரிக்க வைத்து அவர் இல்லையே என நினைத்து அழவும் வைத்துவிட்டார்.
வசனங்கள் அதிகம் நிறைந்த படத்தில் காட்சிகளில் வறுமை ஏற்பட்டுவிடாமல் இனிமை செய்ய நினைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல்பினாய்.
ஜஸ்டின்பிரபாகரன் இசையில் பாடல்கள் சுகம்.பின்னணி இசை காட்சிகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பலம்.
படம் பார்க்கும் ஒவ்வொரு கணவரும் மனைவியும், நாமும் இப்படித்தானே? என்று மனதுக்குள்ளேயாவது நினைப்பது நிச்சயம்.திருமண பந்தம் குறித்த வலிய கருத்துகளை எளிய காட்சிகளில் கொடுத்து, தன் கலையின் மூலம் சமுதாய மருத்துவம் செய்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ்தயாளன்.
– தனா