கிரிக்கெட் விளையாட்டில் 800 விக்கட்களை எடுத்து உலக அளவில் சாதனை புரிந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே ஒரு தமிழ் வீரர் முத்தையா முரளிதரன். இவரின் வாழக்கையை சொல்லும் படமாக வந்துள்ளது 800 திரைப்படம். 800 என்பது முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் தொடர்களில் வீழ்த்திய சாதனை விக்கெட்டுக்களின் எண்ணிக்கை. மொத்தத்தில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மு.மு. ஸ்ரீபதி இப்படத்தை இயக்கி உள்ளார்.மாதுர் மிட்டல் இப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்துள்ளார்.
முதலில் விஜய் சேதுபதி முத்தையா முரளீதரனாக நடிப்பதாக இருந்தது. தமிழ்நாட்டில் பல இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். மு.மு. பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழத்தில் வாழ்ந்துவரும் பூர்வீக ஈழத்தமிழர் அல்ல. வெள்ளையர் காலத்தில் தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு பகுதிகளிலிருந்து கூலி வேலைக்கு பிரிட்டிஷ் அரசால் இலங்கை மலையகப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத் தமிழர்களின் வழி வந்தவர்.
முத்தையா முரளீதரன் ஈழ-மலையகத் தமிழராக இருந்தாலும் அவர் ஒரு போதும் தமிழரின் அரசியலிலோ, அவர்களுடைய போராட்டங்களிலோ தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. போர் வேண்டாம். அமைதி வேண்டும், என்று சொல்லும் வழக்கமான மாமூலான நடுநிலை நிலைப்பாட்டில் நின்று கொண்டார். தமிழர் பகுதியில் துன்புற்ற தமிழர்களுக்காகவாவது அவர் எந்த உதவியும் செய்தவரல்ல. முள்ளிவாய்க்கால் நடந்த 2009 ஆம் ஆண்டு தான் தனக்கு மகிழ்ச்சியான நாள் என்றும் சொல்லியிருக்கிறார். மஹிந்த ராஜபக்சா நெல்சன் மாண்டேலாவைப் போன்றவர் என்றெல்லாம் திருவாய் மலர்ந்தருளிய மாபெரும் ஆட்டக்காரர் நம் மு.மு.
இவர் வாழ்க்கையை எதுக்கு தேர்ந்தெடுத்த படமாய் எடுக்க வந்தார்கள் என்றால், சிங்கள லாபியிஸ்டுகள், தமிழரை அணியில் பெயருக்காவது வைத்திருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேர்ந்தடுக்கப்பட்ட முத்தையா முரளீதரன், தனது சுயநலத்தால் சிங்கள அரசின் அடையாளமாக மாறியதோடு நில்லாமல், தமிழருக்கு எதிராகவும் பேச ஆரம்பித்துவிட்டதால். இந்த எட்டப்பரைப் பற்றி படமெடுத்து ‘தமிழரை சிங்களர் நல்லாத்தான் வெச்சிருந்தாய்ங்க போல’ என்று வருங்கால ரசிகர்களுக்கு கதை சொல்ல.
திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பட் கதையில் ?? இவ்வளவு அரசியல் செய்த இவரின் விளையாட்டு வாழ்க்கையிலும் சில கான்ட்ரோவர்சிகள். அதை மட்டுமே வைத்துச் சுழலுகிறது இந்த 800 திரைப்படம்.
கொழும்பில் உள்ள வீரகேசரி நாளிதழ் ஆசிரியர், முத்தையா முரளிதரன் சந்தித்த சவால்களையும், எதிர்கொண்டவிதம் பற்றியும் சொல்வதாக படம் தொடங்குகிறது.சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட முரளிதரன் பள்ளி, கல்லூரி அணிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் நுழைகிறார். ஆரம்ப காலத்தில் சில சிரமங்களை சந்தித்தவர் பிறகு சிங்களராகவே தன்னை உருமாற்றிக் கொள்கிறார். இவர் பந்தை எறிகிறார் என்று அம்பயர்கள் கூறியதையொட்டிய அரசியலே இவர் விளையாட்டு வாழ்வில் நடந்த பெரும் அரசியலான விஷயம்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதுர் மிட்டல் முரளிதரனாக நடித்திருக்கிறார். சிறப்பாக பந்துவீச்சுப் பயிற்சியெல்லாம் பெற்று கடுமையாக உழைத்திருக்கிறார். பாத்திரமாகவே உருமாற மெனக்கெட்டிருக்கிறார். பட் பேஸ்மெண்ட்டே வீக்கா இருக்கும் போது, பில்டிங் எப்படி ஸ்ட்ராங்கா நிக்கும் ?
முரளிதரனின் அப்பாவாக வேலராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி ஆகியோர் பாசமான குடும்பத்தினர்களாக வருகிறார்கள். நாசர் மு.மு.வின் சாதனையை விவரிக்கும் விவரிப்பாளராக வருகிறார்.
R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவு நன்று. முக்கால்வாசி காட்சிகள் ஸ்டேடியத்துக் காட்சிகளாகவே இருக்கின்றன. ஜிப்ரானின் இசை படத்துக்கேற்றபடி.
முத்தையா முரளீதரன் கிரிக்கெட்டில் லெஜண்ட் என்றால் அதை வைத்து படம் எடுக்கும் அளவு அவர் வாழ்க்கையில் எதுவும் பெரிதாக இல்லை என்பது தான் உண்மை. கிரிக்கெட் பிடிக்குமென்றால் போய் பார்த்துவிட்டு வரலாம். போரடிக்காது. 5 நாள் நீநீ…ளமான ஒரு டெஸ்ட் மேட்சை 3 மணி நேரத்தில் இழுஇழுவென்று இழுத்து பார்த்தமாதிரி இருக்கும். கிரிக்கெட் பிடிக்காது என்றால் அந்தப் பக்கம் போகக்கூட செய்யாதீர்கள்.
இயக்கம் – எம்எஸ் ஸ்ரீபதி
இசை – ஜிப்ரான்
நடிப்பு – மதுர் மிட்டல்
தயாரிப்பு- மூவி டிரைன் மோஷன் பிக்சர்ஸ்