அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் அம்மா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட கிராமமொன்றில் மரணிக்கிறார்.யோகிபாபு வந்துசேர ஓரிருநாட்கள் ஆகும். அதுவரை அந்த அம்மாவின் உடலை வைத்திருக்கவேண்டும். அதற்காக ஃப்ரீசர்பாக்ஸ் எனப்படும் உறைவிக்கும்பெட்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்.அடுத்தநாள் சென்னையில் நடக்கும் ஐபிஎல் எனப்படும் மட்டைப்பந்துப்போட்டியைக் காணப் போகவேண்டிய விதார்த், சந்தர்ப்பவசத்தால் அப்பெட்டியுடன் செல்கிறார்.போன நேரத்தில் எதிர்பாரா சிக்கல், அங்கேயே தங்கவேண்டிய சூழல்.
அங்கு என்ன சிக்கல்? அதன்பின் நடப்பதென்ன? என்கிற கேள்விகளுக்குச் சிரிக்கச் சிரிக்க விடை சொல்லியிருக்கும் படம் குய்கோ.
யோகிபாபு குளிர்கண்ணாடியெல்லாம் அணிந்து காதலிக்கிறார். அரேபியா சென்று பணம் சம்பாதித்த மிடுக்கோடு ஊர் திரும்பும் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் பணத்திமிர். போகிற போக்கில் நாட்டில் நடக்கும் அவலங்களைச் சாடுகிறார். அந்த நகைச்சுவையாளன் அம்மா பாசத்தில் கலங்கும்போது நாமும் கலங்குகிறோம்.
ஃப்ரீசர்பாக்ஸுடன் சும்மா வருகிறார் என்றால் சாதாரணமாகப் போயிருக்கும்.அடுத்தநாள் ஐபிஎல் என்றதன் மூலம் விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அந்த வேடத்தை ஏற்றிருக்கும் விதார்த், அளவெடுத்ததுபோல் நடித்து அதற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
இரண்டு நாயககர்கள் இருந்தால் இரண்டு நாயகிகளும் வேண்டுமே. ஸ்ரீபிரியங்கா, துர்கா ஆகிய இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களும் பொருத்தமாக இருந்து படம் இலகுவாக நகர உதவியிருக்கிறார்கள்.
இளவரசுவின் வேடமும் அவருடைய தேர்ந்த நடிப்பும் படத்துக்குப் பெரும்பலம். முத்துக்குமாரின் நடிப்பும் நன்று.
ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகள் இதமாக அமைந்திருக்கின்றன. காட்சிகளின் உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்பப் படம் பிடித்திருக்கிறார்.
ஆண்டனிதாசனின் இசையில் பாடல்கள் சுகம்.இரைச்சல் இல்லாத பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் அருள்செழியன், நகைச்சுவையில் கலந்திருக்கும் நக்கல் நையாண்டிகள் எல்லாம் கைதட்டல் பெறுகின்றன. கந்துவட்டிக்காரர் நடைமுறை, ஃப்ரீசர்பாக்ஸ் திருட்டு உட்பட எல்லாவற்றிற்குள்ளும் சிரிப்போடு கலந்திருக்கும் மனிதநேயப்பார்வை இயக்குநரின் தனித்திறமை.
குடியிருந்தகோயில் எனும் பொருளில் இந்தப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இரசிகர்கள் மனதில் குடியிருக்கும் படம்.
– அன்பன்