தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் படம் கூழாங்கல்.
குடிநோய்க்கு ஆளான கருத்தடையான், பொண்டாட்டி என்றால் புருசன் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவனுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமுடையவன். (புருசன் என்றால் இப்படியெல்லாம் நினைக்கமுடியுமா? என்று ஆச்சரியப்படுவார்கள் தற்போதைய கணவன்கள் என்பது வேறுவிசயம்). இதனால் மனைவி கோபித்துக்கொண்டு போய்விடுகிறார்.
அவரைத் திருப்பி அழைத்துவர அந்தக் கணவனும் அவர்களின் மூத்த பிள்ளை செல்லப்பாண்டியும் போகும்பயணத்தில் நம்மையும் இணைத்துக்கொண்டிருக்கிறது படம்.
கருத்தடையான், செல்லப்பாண்டி உள்ளிட்ட அனைவரும் புதுமுக நடிகர்கள்,ஆனால் இது திரைப்படம் அவர்கள் நடிகர்கள் என்று யாருமே நினைக்கமுடியாத அளவு அவ்வளவு எதார்த்தம்.
அப்பா, மகன் ஆகியோரின் நீண்ட பயணத்தில் காட்டப்படும் காட்சிகளில் நிரம்பிவழிகிறது நாட்டின் நிலை.அவர்களின் உரையாடல்களில் வெளிப்படுகின்றன மனிதமனங்கள்.
விக்னேஷ்குமுலை,ஜெயாபார்த்திபன் ஆகிய ஒளிப்பதிவாளர்கள், மனிதர்களை நெருக்கமாகவும் நிலப்பரப்பை விரிவாகவும் காட்டி திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கோடை வெப்பத்தை உமிழும் கதையில் நீரூற்றாய் அமைந்து இளைப்பாறுதல் தருகிறது யுவன்ஷங்கராஜாவின் பின்னணி இசை.
படத்தொகுப்பாளர் கணேஷ்சிவா, உலகப்படங்களின் தரத்தில் இந்தப்படத்தைத் தரவேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பிஎஸ்.வினோத்ராஜ்,கற்பனையாக இந்தத் திரைக்கதையை எழுதியிருக்க வாய்ப்பில்லை.இன்னமும் இப்படிப்பட்ட மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்,அவர்கள் உள்ளும் புறமும் துயரங்களை மட்டுமே சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
பல்லாயிரம் எழுத்துகள் கொடுக்காத வலியை ஒரு காட்சி கொடுத்துவிடும். அதை முழுமையாக உணர்ந்து காட்சிகளை வடிவமைத்துத் தன்னை அழுத்தமாக நிறுவியிருக்கிறார் இயக்குநர்.
குடிநீருக்குப் பதிலாகக் கூழாங்கல்லை வாயில் போட்டுக் கொள்ளும் சிறுவன், அவனோடு வரும் அப்பா குடிக்கும் நீருக்குக் குறைவில்லாத நாடாக நம்நாடு இருக்கிறது என்பதைப் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு வியாபாரி கற்கண்டும் விற்கலாம் கள்ளச்சாராயமும் விற்கலாம். பி.எஸ்.வினோத்ராஜ் கற்கண்டு கொடுத்திருக்கிறார்.
– தனா
குறிப்பு – இப்படம் சோனிலிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.