நடித்த முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2.
இப்படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்தார்.
கேஜிஎஃப் 2 வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அப்படத்தின் நாயகிக்கு அடுத்தடுத்து படங்கள் அமையவில்லை.
மிக அண்மையில்தான், கன்னடம் மற்றும் தமிழில் தயாராகவிருக்கும் புதியபடத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அந்தப்படத்தில் நாயகன் கிச்சாசுதீப். இயக்குபவர் நம்ம சேரன்.
இதுதவிர தெலுங்கில் ஒரு புதியபடத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கேஜிஎஃப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஏன் நிறையப்படங்கள் அமையவில்லை என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும்.
அதற்குக் காரணம் இருக்கிறதாம்.
தமிழில் நல்ல படங்கள் மற்றும் பெரியபடங்களில் ஒப்பந்தம் ஆகவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவரை, உங்களுக்கு நான் மேலாளராக இருக்கிறேன் பெரியபடங்களைப் பிடித்துத் தருகிறேன் என்று சொல்லி அணுகியிருக்கிறார் ஒரு பெரியநடிகரின் மேலாளர்.
அவர் இருந்தால் நமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி பெரியநடிகரின் மேலாளரே தன்னுடைய தேதிகளையும் பார்ப்பதற்கு ஒப்புக்கொண்டாராம் ஸ்ரீநிதிஷெட்டி.
ஆனால், அதன்பின் ஒருபடம் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. அவரை யாரும் தேடவில்லையா? என்றால் இல்லை.
நிறையப் பேர் தங்கள் படங்களில் நடிக்கக்கேட்டு அணுகுகிறார்களாம். ஆனால் இந்த மேலாளர் சொல்லும் சம்பளத்தைக் கேட்டு அப்படியே திரும்பி ஓடிவிடுகிறார்களாம்.
அப்படித்தான் அண்மையில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதியபடத்தில் அவரை நாயகியாக்க எண்ணி அணுகியிருக்கிறார்கள்.
அந்தப்படத்துக்காக ஸ்ரீநிதிஷெட்டிக்கு சொல்லப்பட்ட சம்பளம் ஒருகோடியே இருபது இலட்சம் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி.
இதைக்கேட்டதும் ஸ்ரீநிதிஷெட்டி வேண்டாம் என்கிற முடிவுக்குப் படக்குழு வந்திருக்கிறது.
இப்படி வருகிறவர்களிடமெல்லாம் பெரிய சம்பளம் கேட்பதாலேயே அவருக்குப் படங்கள் இல்லை.
இதனால் நல்லதென நினைத்து ஒருவரை வேலைக்கு அமர்த்த அவராலேயே நமக்கு வாய்ப்புகள் இல்லாமல் போகிறதே என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாராம்.
என்னடா இது கேஜிஎஃப் நாயகிக்கு வந்த சோதனை?