இலண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.
அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம்.
இலண்டனில் இருக்கும் மருத்துவர் என்பதற்கேற்ப அழகாகவும் ஒயிலாகவும் இருக்கிறார் ரிச்சர்ட்ரிஷி.அவர் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளை விடப் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும் காட்சிகள் அதிகம். அவருடைய உணர்வுகளைப் பார்ப்போருக்கும் ஏற்பட வைத்திருக்கிறார்.
மனைவியாக நடித்திருக்கும் புன்னகைப்பூ கீதாவின் பாத்திர வடிவமைப்பு பலமானது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற பழமைவாதி போல் தோன்றினாலும் ஓர் சிக்கலை உளவியல்பூர்வமாக அணுகும் போக்குடைய புதுமைப்பெண் வேடம் அவருக்கு. பொருத்தமாக நடித்திருக்கிறார்.
விளம்பர அழகி, பிறன்மனை நோக்கும் பிரியை ஆக நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அதற்கேற்ப சொலிலும் செயலிலும் கவர்ச்சி காட்டிக் கவர முயல்கிறார்.
மசாலா காஃபி, பிஜாரன் சுரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஆளுக்கொரு பாடல். அனைத்தும் நன்று.
ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தனுக்கு பரபரப்பு மற்றும் படபடப்புக் காட்சிகளைப் படமாக்கக் குறைவான இடங்களையே கொடுத்திருக்கிறார்கள்.அதை நேர்த்தியாகச் செய்ததோடு கிடைக்கும் நேரத்திலெல்லாம் இலண்டன் மாநகரின் புற அழகை வளைத்து வளைத்துக் காட்டி மகிழ்விக்கிறார்.
மொத்தம் நான்கு கதாபாத்திரங்களுக்குள் முடிந்துவிடும் சின்னக்கதை.ஆனால் அக்கதாபாத்திரங்களின் அகவுணர்வுகள் ஆழமானவை.அவற்றை வைத்து இயக்குநர் வினய்பரத்வாஜ் அமைத்திருக்கும் திரைக்கதை பலம்.
மனைவி அமைவதெல்லாம் வரம், புன்னகைப்பூ கீதா போல் அமைந்துவிட்டால் சாகாவரம்.
– இளையவன்