காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத் தெரியும் ஆனால் பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் வண்ணம் படமாக்கியிருக்கிறார்.
நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை காதலிக்கிறார்.அவரும் சம்மதிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு. அதனால் தாங்கவொண்ணாச் சோகம். அதனால் சீரழியும் ரியோராஜைப் பாதுகாக்க அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மனைவியாகும் பவ்யா ட்ரிக்காவால் மேலும் துன்புறும் ரியோராஜ்,அதன்பின் மனைவியின் சிக்கலை உணர்ந்து அதைத் தீர்க்க முயல்கிறார். அது என்ன சிக்கல்? அதை எப்படி எதிர்கொண்டார்? என்பதுதான் படம்.
துடிப்பான கல்லூரி மாணவர்,காதல் தோல்வி தாடியுடன் சோகமாகத் திரியும் பாவப்பட்ட இளைஞர், சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனாளி ஆகிய மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெற்றிருக்கிறார் ரியோராஜ்.இப்படம் அவருக்குப் பல வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது.
காதலியாக நடித்திருக்கும் மாளவிகாமனோஜ் அழகான புதுவரவு. துள்ளல் நடிப்பில் கவர்ந்து பின்பு கலங்கவும் வைத்துவிடுகிறார்.
மனைவியாக நடித்திருக்கும் பவ்யாட்ரிக்காவுக்கு ஆழமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வேடம். அதற்கேற்ப நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் அவருக்குப் பெரும்பலம்.
சிலகாட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் சார்லி. அன்புதாசன், ஏகன்,இளங்கோ குமணன் ஆகியோரும் நன்று.
சித்துகுமாரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை ஆகியன பொருத்தமாக அமைந்து காட்சிகளுக்கு வலுவூட்டியிருக்கின்றன.
ராகுல் கே.ஜி.விக்னேஷின் ஒளிப்பதிவு கதையில் இருக்கும் பல்வேறு மாற்றங்களைக் காட்சிகளிலும் கடத்தியிருக்கிறது.
வருண் கே.ஜி யின் படத்தொகுப்பில் தாழ்வில்லை.
சிற்சில குறைகள் இருப்பினும் ஒன்றுக்கு இரண்டு காதல்களைச் சொல்லி இளைஞர்களுக்குப் புதிய வழியைக் காட்டியிருக்கும் இயக்குநர் ஹரிஹரன்ராம் பாராட்டுக்குரியவர்.
இந்தப்படத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த நாயகன் ரியோராஜின் நம்பிக்கை வீண்போகவில்லை.
– தனா