ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நயன்தாராவுக்கு பெரிய சமையல்கலைஞராக வேண்டும் என்பதுதான் ஆசை.பெண்கள் சமையல்கட்டை விட்டு வெளியே வரப் போராடும் கதைகள் பார்த்திருக்கிறோம்.இங்கோ சமையல் கலைஞராவதற்கே போராடவேண்டியிருக்கிறது. அது ஏன்? என்பதற்கான விடையாக விரிந்திருக்கிறது படம்.
அன்பான அமைதியான நயன்தாரா.பெரும்பாலும் மெல்லிய புன்னகையுடன் வலம்வருகிறார்.அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்.அசைவம் சாப்பிடவே எதிர்ப்பு சமைப்பதென்றால்?கடும் எதிர்ப்பு,அதை மீறி சமையல்கலை படித்து சமைக்கப்போனால் அங்கும் சிக்கல்கள். அவற்றை எதிர்கொள்கிறார். இயல்பான பெண்களைக் காட்டிலும் பன்மடங்கு சக்தி வாய்ந்த பெண்கள் செய்யவேண்டிய செயல் செய்யும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.
நயன்தாராவின் நலன்விரும்பும் தோழன் கதாபாத்திரம் நாயகன் ஜெய்க்கு. காலங்காலமாகக் கதாநாயகர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் கதாநாயகிகள் கதைக்கு நேரெதிராக இந்தப்படத்தில் நாயகிக்குக் கடைசிவரை ஒத்தாசையாக இருக்கிறார் ஜெய். அதையும் கம்பீரமாகச் செய்திருக்கிறார். அதேநேரம் நயன்தாராவிடம் தன் உள்ளத்தில் உள்ளதைச் சொல்லத் தயங்குமிடங்கள் சுவை.
பிரபல சமையல்கலை நிபுணராக நடித்திருக்கிறார் சத்யராஜ். சமையலின் மகத்துவத்தைப் பேசுவதற்காக இருக்கிறார் கே.எஸ்.இரவிக்குமார், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத்குமார், தன் தேர்ந்த நடிப்பால் அந்த வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக வருகிறார் கார்த்திக்குமார்.இவரா இப்படி? என்று நினைக்குமளவுக்கு நடித்திருக்கிறார்.சுரேஷ்சக்ரவர்த்தி ரெடின்கிங்ஸ்லி உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் சத்யன்சூரியன், நயன்தாராவின் இரசிகர்களைத் திருப்திப்படுத்த மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.
தமன் இசையில் பாடல்கள் கேட்கலாம். பெண்களின் பெருமை பேசும் பாட்ல் மனதில் பதிகிறது.பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.
உணவு உண்பது அவரவர் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப நடக்கும் ஒரு செயல். தற்காலத்தில் அதற்கும் பல கட்டுப்பாடுகள். அவற்றிற்கான எதிர்வினையாக இந்தக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் நிலேஷ்கிருஷ்ணா.
நயன்தாராவின் சமூகம் ஜெய்யின் சமூகம் ஆகியன திரைக்கதையோட்டத்துக்குப் பலம் சேர்க்கின்றன.பல்வேறு தடைகளைக் கடந்து கடைசியில் பிரியாணி சமைத்தால் வெற்றி எனும் நிலை.ஆனால் நயன்தாராவுக்கு நன்றாக பிரியாணி சமைக்கத் தெரியாது. அந்த நேரத்தில் அவர் செய்யும் செயல் அறிவியலுக்கு முரணானது என்றாலும் ஆழமான அர்த்தம் உடையது.
இதை எழுதிய நிலேஷ்கிருஷ்ணாவும் ஏற்றுக் கொண்ட நயன் தாராவும் பாராட்டுக்குரியவர்கள்.
– இளையவன்