ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள்.
ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் கதாபாத்திரம் பருத்திவீரன் சரவணனுக்கு.சும்மாயிருப்பதே சுகம் எனும் நினைக்கும் அவருடைய உடல்மொழியும் நடிப்பும் படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது.அடுத்தவர் வீட்டுக்குக் கிடைக்கும் தொகையைத் தன் கணக்கில் சேர்க்கும் தந்திரம்,அதை அநாயசயமாக எதிர்கொள்ளும் இலாவகம் ஆகியன அவருடைய தனிச்சிறப்பு.
மாமன் சரவணனுக்கு ஏற்ற மருமகனாக வருகிறார் விதார்த்.ஜாடிக்கேற்ற மூடி போல் சரவணனுக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.காதல் மற்றும் கடைசிக்காட்சிகள் அவருக்கென அமைந்திருக்கின்றன.
நாயகியாக வரும் அருந்ததிநாயருக்கு அதிக வேலையில்லை. கொடுத்ததைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
கழிவறை கட்ட குழிதோண்டும் தொழிலாளர்களாக வரும் ஜார்ஜ்மரியான் மற்றும் பவுன்ராஜ், மீன்வியாபாரியாக நடித்திருக்கும் ஹலோகந்தசாமி,காவல்துறை ஆய்வாளராக வரும் பாரதிகண்ணன் உட்பட படத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிற வேலைதான். இவர்களில் ஹலோகந்தசாமியின் வேடமும் அவர் நடிப்பும் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன.
கிராமங்களின் இயல்பை இயல்பாகக் காட்சிப்படுத்தி நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பானுமுருகன்.
ஜோகன்சிவனேஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றன.
ராம், சதீஷ் ஆகியோரின் படத்தொகுப்பு பலவீனமில்லாமல் இருப்பது பலம்.
மக்களுக்கு அடிப்படையான அத்தியாவசியத் திட்டம் போடும் அரசாங்கம்,அதை மிகச்சாதாரணமாக எதிர்கொள்ளும் மக்கள்,ஆயிரம்பொற்காசுகள் கிடைத்த தகவல் ஒவ்வொருவராகப் பரவி ஊர்முழுக்க நிறையும் நிகழ்வு,எல்லாவற்றையும் தாண்டி அதைக் கைப்பற்றும் கை ஆகியனவற்றை வைத்து மனம் மகிழ்ந்து சிரிக்க வைத்திருக்கிறார் புது இயக்குநர் ரவி முருகையா.
– இளையவன்